திருப்போரூர் ஓஎம்ஆர் சாலையில் அதிவேக மணல் லாரிகளால் பள்ளி மாணவர்கள் அச்சம்

திருப்போரூர்: திருப்போரூர் பகுதியில்  அதிவேகத்தில் செல்லும் மணல் லாரிகளால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். திருப்போரூரில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் சிறுதாவூர் மற்றும் மானாம்பதி ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகளில் இருந்து லாரிகள் மூலம் மண் எடுத்து செல்லப்படுகிறது. இவ்வாறு எடுத்துச்செல்லப்படும் மண் திருப்போரூர் புறவழிச்சாலை பணிகளுக்கும், அரசின் பல்வேறு திட்டப்பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

மண் எடுத்து செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து அதற்காக ஒவ்வொரு லாரிக்கும் எவ்வளவு கொள்ளளவு மண் எடுத்துச்செல்லவேண்டும், தார்ப்பாயால் மூடி எடுத்துச்செல்ல வேண்டும் என பல்வேறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், லாரிகளில் மண் எடுத்து செல்லும் ஒப்பந்ததாரர்கள் நிபந்தனைகளை காற்றில் பறக்கவிட்டுள்ளனர். அனு மதிக்கப்பட்ட அளவைவிட அதிக மண் எடுத்து செல்வதோடு, தார்ப்பாயும் மூடாமல் செல்கின்றனர். இதனால் லாரிகளில் ஏற்றிச்செல்லப்படும் மண், காற்றில் பறந்து சாலையில் செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோரின் கண்களை பதம் பார்க்கிறது.

மேலும் லாரிகள் அதிவேகத்துடன் செல்வதால், பள்ளிக்கு போகும் மாணவர்கள் அச்சமடைந்து வருகின்றனர். லாரிகள் போட்டி போட்டுக்கொண்டு செல்வதாலும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்துவதாலும் லாரிகளுக்கு முன்னாலும், பின்னாலும் செல்லும் வாகன ஓட்டிகள் பயந்தபடி செல்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்டும்காணாமல் உள்ளனர். எனவே, திருப்போரூர் ஓஎம்ஆர் சாலையில் மண் ஏற்றிச்செல்லும் லாரிகளை கண்காணித்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: