தொடர் கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது: 3வது வாரமாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுப்பு

கம்பம்: தொடர் கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 3வது வாரமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலம் சுருளி அருவியாகும். இந்த அருவிக்கு தமிழகம், கேரளா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

தற்போது, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளான கம்பம், கூடலூர், பாளையம், சின்னமனூர் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மேகமலை, தூவானம் அணை, அரிசிப்பாறை, ஈத்தகாடு வனப்பகுதியில் பெய்யும் பலத்த மழையால், ஓடைகளில் வெள்ளமாக சுருளி அருவிக்கு வருகிறது. இதன் காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த 2ம் தேதி முதல் சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடிப்பதால், கடந்த மூன்று வாரங்களை கடந்து தடை உத்தரவு நீடிக்கிறது. இதனால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories: