பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை: பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் 66 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர். போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் கோபால், உயர் அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். 2-வது நாளாக நீடித்த 7ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கங்களை தவிர மற்ற அனைத்து சங்கங்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர், பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக தெரிவித்தார். ஓய்வூதிய குடும்பத்தினருக்கு இலவச பயண சலுகை வழங்கப்படும். கொரோனா காலத்தில் பணியாற்றிய  அனைத்து பணியாளர்களுக்கு சிறப்பு நிதியாக பணி ஒன்றுக்கு ரூ.300 வழங்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், கடந்த ஆட்சிக்காலத்தில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படுவதாக அறிவித்தார். இதனிடையே ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கான காலம் 3 ஆண்டுகளாகவே நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து பணிமனைகளிலும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று சிஐடியூ, ஏஐடியூசி ஆகிய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

Related Stories: