பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம்: பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பு கருத்து

சென்னை: பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் என பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண், ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேர் அந்த கும்பலால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பு, பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் என கூறியுள்ளார். மேலும் அவர் இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட் பதிவில்; பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தாக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் உயிருக்கு பயந்த நிலையில் இருக்கும் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அத்தகைய வெறிச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் விடுதலை செய்ய கூடாது.

அப்படி விடுவிக்கப்பட்டால் அது மனித குலத்திற்கும், பெண்களுக்கும் இழைக்கப்படும் அவமானமாகும். பில்கிஸ் பானு மட்டுமல்லாமல் வேறு எந்த பெண்ணாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவருக்கு, அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: