மேகமலை வனப்பகுதியில் வாகனங்களால் குரங்குகளுக்கு ஆபத்து-வேகத்தடை அமைக்க கோரிக்கை

வருசநாடு : வருசநாடு மேகமலை வனப்பகுதியில் செல்லும் வாகனங்களால் குரங்குகளின் உயிரிழப்பு அதகரித்து வருகிறது. எனவே இச்சாலையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வருசநாடு, மேகமலை உள்ளிட்ட வனப்பகுதியில் அனுமன் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதே பகுதியில் மயிலாடும்பாறை அருகே தாழையூத்து வழியாக மதுரை மாவட்டத்தை இணைக்கும் மல்லப்புரம் மலைச்சாலை அமைந்துள்ளது. இந்த மலைச்சாலை வழியாக பஸ் போக்குவரத்து இல்லை. இருப்பினும் கடமலை-மயிலை ஒன்றியத்தில் இருந்து மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பைக், ஆட்டோ, வேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் மலைச்சாலை வழியாக நாள்தோறும் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக அடர்ந்த வனப்பகுதியில் மட்டுமே வசிக்கும் அனுமன் மந்தி என்று அழைக்கப்படும் குரங்குகள் மல்லப்புரம் மலைச்சாலை ஓரங்களில் கூட்டம் கூட்டமாக காணப்படுகிறது. நீண்ட வாலுடன் உடல் முழுவதும் வெள்ளை நிறத்தில் காணப்படும். இந்த வகை குரங்குகளை வாகன ஓட்டிகள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். சில வாகன ஓட்டிகள் குரங்குகளுக்கு வாழைப்பழம் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கிச் செல்கின்றனர். சிலர் இந்த குரங்குகளை சாமி போல நினைத்து வணங்கிச் செல்கின்றனர்.

இதற்கிடையே மல்லப்புரம் மலைச்சாலையில் ஆபத்தான வளைவுகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. வாகனப் போக்குவரத்து இல்லாத நேரங்களில் குரங்குகள் சாலை வளைவுகளில் கூட்டம் கூட்டமாக அமர்ந்துள்ளன. இதனால் மலைச்சாலையில் திடீரென வரும் வாகனங்களால் அவை அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன. எனவே மல்லப்புரம் மலைச்சாலையில் குரங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு அருகே எச்சரிக்கை பலகைகள் மற்றும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே போல் மேகமலை சின்னச்சுருளி அருவிப்பகுதியில் அதிகளவில் சுற்றித்திரியும் அனுமன் மந்திகள் தங்களை தாக்கிவிடும் என்று சுற்றுலா பயணிகள் அச்சத்தில் உள்ளனர், எனவே, அப்பகுதிகளில் கூடுதல் வனத்துறை அதிகாரிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்ட வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: