ஆரல்வாய்மொழி அருகே மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் பலி-சிறுத்தை நடமாட்டமா? வனத்துறை தீவிர விசாரணை

ஆரல்வாய்மொழி : நாகர்கோவில்  கே.பி ரோடு மத்தியாஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி (75). இவருக்கு  சொந்தமான தென்னந்தோப்பு செண்பகராமன்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட  வில்லுச்சேரி குளம் அருகில் உள்ளது. செண்பகராமன்புதூர் பகுதியை ேசர்ந்த  அய்யாப்பிள்ளை என்பவர் அங்கு தங்கி வேலை பார்த்து வருகிறார். இங்கு  30க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் சில மாடுகள் வளர்த்து வருகின்றனர்.

இந்த  நிலையில் நேற்று காலை வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப, அவை  கட்டப்பட்டு இருந்த இடத்திற்கு அய்யாப்பிள்ளை சென்று பார்த்தார். அப்போது 6  ஆடுகள் வயிறு மற்றும் கழுத்து பகுதிகளில் மர்ம விலங்கு கடித்து குதறிய  நிலையில் இறந்து கிடந்தன. சில ஆடுகளின் குடல் வெளியே சரிந்த நிலையில்  காணப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தோட்ட உரிமையாளர்  நல்லதம்பிக்கு தகவல் தெரிவித்தார்.

அவர் சம்பவ இடம் விரைந்து வந்து  பூதப்பாண்டி வனசரகர் ரவீந்திரனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து  வனத்துறையினர் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். ஆடுகளை  கடித்து குதறியது சிறுத்தையாக இருக்குமா? அல்லது வேறு காட்டு விலங்குகளா  என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம்  அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: