பில்கிஸ் பானு வழக்கு.: குற்றவாளிகளை குஜராத் அரசால் விடுவிக்கப்பட்டதை எதிர்க்கும் மனுக்களை விசாரிப்பது குறித்து பரிசீலிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

டெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரை குஜராத் அரசால் விடுவிக்கப்பட்டதை எதிர்க்கும் மனுக்களை விசாரிப்பது குறித்து பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 2002 குஜராத் கோத்ரா ரயில் எரிப்பிற்குப் பின்னர், ஏற்பட்ட கலவரத்தில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவில் ஏற்பட்ட மிகப் பெரிய கலவரங்களில் ஒன்றாக இதுவும் கருதப்படுகிறது.

இந்த கலவரத்தில் நாட்டையே உலுக்கும் வகையில் பல மோசமான கொலை, கொள்ளை மற்றும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அரங்கேறின. அதில் ஒன்று, அகமதாபாத்தில் உள்ள ரன்திக்பூர் பகுதியில் இருந்த பில்கிஸ் பானு-வின் குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரை ஒரு கும்பல் அடித்தே கொன்றது. ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை அந்தக் கும்பல் மிகக் கொடூரமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தது. இதுமட்டுமின்றி, பில்கிஸ் பானுவின் சிறு குழந்தையைப் பாறையில் மோத வைத்து கொடூரமாகக் கொலை செய்தனர்.

இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 11 பேரை குற்றவாளிகளாக அறிவித்து அவர்களுக்கு, மும்பை செசன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி குற்றவாளிகளில் ஒருவர் தொடர்ந்து வழக்கின் அடிப்படையில் குஜராத் அரசு சிறப்புக் குழுவை அமைத்தது. இந்தக் குழு அளித்த பரிந்துரை அடிப்படையில், அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டனர்.  

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளாக கருதப்பட்ட 11 பேரை குஜராத் அரசு விடுதலை செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது பல இடங்களில் பேசும் பொருளாகவும் மாறியது. இந்தநிலையில் அந்த 11 பேர்  விடுவிக்கப்பட்டதை எதிர்க்கும் மனுக்கள் தொடர்ந்து வந்த நிலையில், அந்த மனுக்களை விசாரிப்பது குறித்து பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories: