ஆயுத பூஜை, தீபாவளி விடுமுறைக்கு முன்னதாக ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டண வசூல் புகார்களுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உறுதி

சென்னை: ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் வருகிறது. வருகிற ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை என தொடர் விடுமுறை வருவதற்குள் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆகஸ்ட் 12ம் தேதியில் இருந்து 16ம் தேதி வரை தொடர் விடுமுறை நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் போக்குவரத்து ஆணையர் நிர்மல்ராஜ் முன்னிலையில் இணை ஆணையர், துணை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் ஆய்வுகள் செய்யப்பட்டன. அப்படி ஆய்வு செய்தபோது 953 பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

அதில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் செய்த 97 பேருக்கு ரூ.68,800 கட்டணம் திரும்ப வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 4 ஆம்னி பேருந்துகள் அனுமதி இல்லாமல் இயக்கப்பட்டதால் நடவடிக்கை எடுத்து அபராத தொகையாக  ரூ.11 லட்சத்து 4  ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. எந்த ஆம்னி பேருந்துகளாவது கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயணிகளுக்கு பணம் திரும்ப வழங்கப்படும்.

வருகிற அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை, தீபாவளி என தொடர் விடுமுறை வருகிறது. அப்போது, இதுபோன்ற பிரச்னை வராமல், அதை எப்படி கையாள்வது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

கடந்த நாட்களைபோல தொடர்ந்து புகார் வரும் ஆம்னி பேருந்துகள் மீது, முக்கிய நகரங்களில் உள்ள வட்டார அலுவலக அதிகாரிகளே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து என்பது ஒப்பந்த ஊர்தி ஆகும். இதுபோன்று விழா காலங்களில் இயக்கப்படும் வாகனம். அதனால், கட்டண கொள்ளையை எந்த நடவடிக்கையின் கீழ் கொண்டு வருவது என்பது குறித்து கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும். அதேபோன்று ஆம்னி பேருந்து சங்கத்தினருடனும் ஆலோசனை நடத்தப்படும். வரும் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் இதுபோன்ற கட்டண உயர்வு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர் விடுமுறை நாட்களில், பொதுமக்கள் வசதியாக சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்கி வருகிறோம். தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் முன்கூட்டியே அட்டவணை அறிவிக்கப்பட்டு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்த விடுமுறையின்போது, அரசு சார்பில் இரவு 12 மணிக்கு மேல் வரை கூட அரசு பேருந்து இயக்கப்பட்டது. ஆனால், தனியார் பேருந்து பயணம் செய்ய விரும்புகிறவர்கள் அவர்கள் கட்டணத்தை உயர்த்தினாலும் பரவாயில்லை என்று சொகுசாக பயணம் செய்ய விரும்பி செல்கிறார்கள். ஒரு சிலர்தான் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் செய்கிறார்கள். விமானங்களில் இதுபோல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ரயில்வேயில் கூட அவ்வப்போது கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

ஆம்னி பேருந்தை பொறுத்தவரை விமானம், ரயிலைபோல ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் கட்டணம் கூடுதலாக வசூலிக்கிறார்கள். அரசு தொடர் நடவடிக்கை மூலம் இதை கட்டுப்படுத்தியுள்ளோம். தற்போதும் கூட்டம் நடத்தி இதற்கு நிரந்தர தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வருகிற ஆயுத பூஜை, தீபாவளி என தொடர் விடுமுறை மற்றும் விழா காலம் வருவதற்குள் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்படும். இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார். பேட்டியின்போது போக்குவரத்து ஆணையர் நிர்மல்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தார்.

ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படுமா?

ஆட்டோ எளிய மக்களுக்காக ஓடும் வாகனம். ஆம்னி, மற்ற நாட்களில் 10, 5 பயணிகளுடன் செல்லும் நிலை உள்ளது. அவர்களுக்கு கிடைக்க கூடிய வாய்ப்பு, விழா காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஒன்றுதான். அதனால் கட்டண உயர்வை பயன்படுத்துகிறார்கள். மக்கள்தான் அரசு பஸ்சை பயன்படுத்த வேண்டும். ஆட்டோ கட்டண உயர்வு குறித்து, துறை ரீதியான ஆய்வில் உள்ளது. அது முடிந்தபிறகு இறுதி முடிவு அறிவிக்கப்படும். இரவு நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா காலத்தில் இரவு பேருந்து குறைக்கப்பட்டது. தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். பெண்களுக்கான இலவச பஸ்சில் பயணம் செய்வது சென்னையில் முதலில்  40 சதவீதமாக இருந்தது. இப்போது 69 சதவீதத்தை தாண்டி போய்க்கொண்டு இருக்கிறது. அதற்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். 500 இ-பஸ் வாங்கும் நடவடிக்கையில், தற்போது அது டெண்டர் நிலையில் உள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்கள் மூலம் பெண்களுக்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கத்தான் பேருந்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் சிவசங்கர்.

* அரசு பஸ்சில் சென்றால் பிரச்னை இருக்காது

அமைச்சர் என்ற முறையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று எனக்கே புகார் வருகிறது. ஆனாலும், 97 புகார் என்பது மிகவும் குறைவாக இருக்கிறது. ஆம்னி பேருந்தில் பயணம் செய்யும் மீதி பேர் புகார் செய்யாமல் பயணம் செய்கிறார்கள் என்பது தெரிகிறது. சிலர் விரும்பி, பணத்தை ஒரு பிரச்னையாக எடுத்துக்கொள்ளாமல் ஆம்னி பேருந்தில் பயணம் செய்கிறார்கள். ஆம்னி பேருந்து என்பது ஒப்பந்த ஊர்தி. டீசல் கட்டணம் உயர்ந்த பிறகும், அரசு பேருந்தில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. விழாக் காலங்களில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. கூடுதல் கட்டணம் செலுத்தி ஆம்னி பஸ்சில் செல்கிறார்கள். இதிலும், மிக குறைந்த பயணிகளே புகார் அளிக்கிறார்கள். பொதுமக்கள் அரசு பஸ்களை பயன்படுத்தினால் இதுபோன்ற பிரச்னை இருக்காது. அதனால் மக்கள் அரசு பேருந்தில் விரும்பி பயணம் செய்ய வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: