பரந்தூர் இரண்டாம் விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் நிலங்களை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததில் அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு: அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடு குறித்து அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

சென்னை: பரந்தூர் 2ம் விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் உள்ள நிலங்களை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததில் அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு ஏற்படும் என அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டியுள்ளது. இதுகுறித்து, அறப்போர் இயக்கம் சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. அப்போது, அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறியதாவது: ஸ்ரீபெரும்புதூர் அருகே பரந்தூரில் 2ம் விமானநிலையம் 20 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ளது. அங்குள்ள 73 ஏக்கர் நிலத்தின் மதிப்பீட்டை அதிகரிப்பதற்காக பத்திரப்பதிவில் மோசடி செய்துள்ளனர். பிரகாஷ் சில்க்ஸ் அண்டு சாரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பரந்தூர், நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த 73 ஏக்கர் நிலத்தில் ஒரு சில பகுதிகளை சதுர அடியில் பதிவு செய்ய 2020 மார்ச் 12ம் தேதி காஞ்சிபுரம் இரண்டு இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்களை அளித்துள்ளனர்.

இதை 2020 மார்ச் 26ம் தேதி சார்பதிவாளராக இருந்த பிரகாஷ் மாவட்ட பதிவாளருக்கு இதை பதிவு செய்ய முடியமா என்று விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளார். மேலும், குறிப்பிட்ட 631 சர்வே எண் முழுவதும் நிலமாகவே உள்ளது எனவும், பசுமை விமான நிலையம் அமைய உள்ள நிலையில், அதிக விஸ்தீரணத்தில் அதிக சர்வே எண்களை சதுர அடியாக மாற்ற ஆவணம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது எனவும், நிலம் கையகப்படுத்தும்போது இழப்பீட்டு தொகையை அதிகமாக பெற சதுரடியாக மாற்றிப்பதிவு செய்ய தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பரந்தூர் 2ம் விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் மோசடி பத்திரப்பதிவு அதன் அடிப்படையில் மாவட்ட பதிவாளர் எந்த சர்வே எண்ணில் அமைந்துள்ளது என்பதை பிரத்யேகமாக ஆவணத்தில் குறிப்பிடாத நிலையில், இந்த ஆவணத்தை பதிவு செய்ய வேண்டாம் எனக் கூறி திருப்பி அனுப்புமாறு கூறியுள்ளார். இதை தொடர்ந்து, கூடுதல் பத்திரப்பதிவு துறை தலைவர் ஸ்ரீசீனிவாசன், பிரகாஷ் சில்க்ஸ் அண்டு சாரீஸ் நிறுவனத்தின் நிலத்தை சதுர அடியில் பதிவு செய்ய வேண்டும் எனக் கடிதம் அனுப்பி உள்ளார். இதை பத்திரப்பதிவு செய்ய மறுத்த பிரகாஷை இடம் மாற்றம் செய்துவிட்டு, காஞ்சிபுரத்தில் 2வது இணை சார்பதிவாளராக ராஜதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர், ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.8,71,000 என இருந்ததை சதுரடி மதிப்பீட்டில் ஏக்கருக்கு 64 லட்சத்து 45,455 என நிர்ணயம் செய்து பதிவு செய்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் கிராமப்புறங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும்போது 4 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதன்படி ரூ.25 கோடியில் வழங்க வேண்டிய இழப்பீடு ரூ.191 கோடி என உயர்ந்து, ரூ.165 கோடி கூடுதலாக அரசிற்கு இழப்பு ஏற்படும். எனவே அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மோசடியில் ஈடுபட்ட கூடுதல் ஐஜி ஸ்ரீ சீனிவாசன், சார்பதிவாளர் ராஜதுரை மீதும், பிரகாஷ் சில்க்ஸ் அண்டு சாரீஸ் நிறுவனத்தினர் மீதும் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த மாதத்துடன் ஓய்வுபெற உள்ள ஸ்ரீனிவாசன் மற்றும் மோசடியில் ஈடுபட்ட பொது ஊழியர்களையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.இவ்வாறு கூறினார்.

Related Stories: