பால் விற்பனை 50 ஆயிரம் லிட்டர் அதிகரிப்பு ஆவினில் புதிதாக 10 பொருள் அறிமுகம்: அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்

சென்னை: தனியார் பால் விலை ஏற்றம் காரணமாக, ஆவின் பால் விற்பனை நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் அதிகரித்துள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்தார். ஆவினில் 10 புதிய பொருட்கள் விற்பனையை சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை செயலாளர் கார்த்திக், மேலாண் இயக்குனர் சுப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர், அமைச்சர் நாசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 36 அறிவிப்புகளில் 20 அறிவிப்புகள்  நிறைவேற்றப்பட்டுள்ளன. அறிவிப்புகளில் ஒன்றான புதிய பொருட்கள்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மாதத்திற்கு 2 கோடி ரூபாய் லாபத்தை எதிர்பார்க்கிறோம். ஆவின் குடிநீருக்கு முதலமைச்சர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இதுகுறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார். புதிய பொருட்கள் தயாரிப்பதன் மூலம் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது. நாளொன்றுக்கு 38  லட்சம் லிட்டரில் இருந்து 41 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது.

பால் விலையை குறைத்ததன் மூலம் நாளொன்றுக்கு 85 லட்சம் நஷ்டம் ஏற்படுகிறது. மேலும், ஆயுத பூஜை இனிப்புகள் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. அந்த பொருட்கள் விரைவில் தொடங்கி வைக்கப்படும். தனியார் பால் விலை ஏற்றத்தின் மூலம் ஆவின் பால் விற்பனை நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் அதிகரித்துள்ளது. பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரம் உள்பட இதர விளம்பரங்கள் இடம் பெறுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்.  பால் பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக விற்றால் கடும்  நடவடிக்கை எடுக்கப்படும்.

அறிமுகப்படுத்தப்பட்ட 10 பொருட்கள் விவரம்

1. பலாப்பழ ஐஸ்கிரீம்    125மி.லி    45 ரூபாய்

2. வெள்ளை சாக்லேட்    45 கிராம்    30 ரூபாய்

3. குளிர்ந்த காஃபி    200 மி.லி    35 ரூபாய்

4. வெண்ணெய் கட்டி    200 கிராம்    130 ரூபாய்

5. பாஸந்தி    100 மி.லி    60 ரூபாய்

6. ஆவின் ஹெல்த் மிக்ஸ்    250 கிராம்    120 ரூபாய்

7. பாலாடைக்கட்டி    200 கிராம்    140 ரூபாய்

8. அடுமனை யோகர்ட்    100 கிராம்    50 ரூபாய்

9. ஆவின் பால் பிஸ்கட்    75 கிராம்    12 ரூபாய்

10. ஆவின் வெண்ணெய் முறுக்கு    200 கிராம்    80  ரூபாய்    

Related Stories: