ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக கருத்து வெளியிடும் சமூக ஊடகங்களுக்கு தடை

தூத்துக்குடி: நாட்டின் பாதுகாப்பிற்கு எதிராக கருத்துகள் வெளியிட்டால் சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும் என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரனின் வீரவணக்க நிகழ்ச்சியை முன்னிட்டு நெல்லையில் இன்று ஒண்டிவீரன் நினைவு தபால்தலை, ஒன்றிய அரசு சார்பில் வெளியிடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், நேற்று தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விடுதலை போராட்ட வீரர்களை நினைவுகூறும் வகையில் தூர்தர்ஷனில்  நாளை முதல் 75 வாரங்கள் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட

உள்ளது. கருத்து சுதந்திரம் என்பது ஜனநாயகத்தில் உள்ளது. அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. ஒன்றிய அரசுக்கு எதிராக, இந்திய ராணுவத்துக்கு எதிராக இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக ஏதாவது நிறுவனம் செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் 100க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நேற்றும் இந்திய நாட்டிற்கு எதிராக தேசத்திற்கு எதிராக கருத்துகளை சொன்ன 10 சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேசத்திற்கு எதிராக கருத்துகளை வெளியிடும் எந்த யூடியப் சேனல்  ஆக இருந்தாலும் எந்த ஒரு சமூக ஊடகமாக இருந்தாலும் அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Related Stories: