பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் சுப்பிரமணியன் சுவாமி மம்தாவுடன் திடீர் சந்திப்பு

கொல்கத்தா: பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் சுப்பிரமணியன் சுவாமி, கொல்கத்தாவில் அம்மாநில முதல்வர் மம்தாவை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை கொல்கத்தா மாநிலச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘கொல்கத்தா சென்றேன்; துணிச்சலான ஆளுமைமிக்க தலைவர் மம்தா பானர்ஜியை சந்தித்தேன்.

இடதுசாரி கட்சிகளுக்கு எதிரான அவரது போராட்டத்தை பாராட்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். மம்தா - சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பானது, மரியாதை நிமித்தமான சந்திப்பாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், மம்தா பானர்ஜியை சுப்பிரமணியன் சுவாமி சந்தித்தது, முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுப்பிரமணியன் சுவாமி, மம்தா பானர்ஜியை டெல்லியில் சந்தித்தார். சமீபத்தில் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறும் வழக்கமான விஷயங்கள் என்று சிலவற்றை குறிப்பிட்டு, மோடியை கடுமையாக சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்து இருந்தார். தொடர்ந்து அவர் பாஜகவை விமர்சித்து வரும் நிலையில் மம்தாவை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related Stories: