மாமல்லபுரத்தில் நரிக்குறவர்கள் 3 பேருக்கு கடைகள்; கலெக்டர் ஆணை

சென்னை: நரிக்குறவர்கள் பிழைப்பு நடத்த 3 கடைகள் ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றி கலெக்டர் ராகுல் நாத் ஆணை வழங்கினார். மாமல்லபுரத்தில் உள்ள ஸ்ரீதலசயன பெருமாள்  கோயிலில் கடந்த அக்டோபர் 24ம் தேதி  அன்னதானம் சாப்பிட வந்த மாமல்லபுரம் பூஞ்சேரி நரிக்குறவர் குடியிருப்பை சேர்ந்த நரிக்குறவ பெண் அஸ்வினி (23) மற்றும் சிலரை கோயில் நிர்வாகம் அவமானப்படுத்தி, அன்னதானம் சாப்பிட விடாமல் விரட்டியதாக புகார் வந்தது. இதைத் தொடர்ந்து, தான் அவமானப்படுத்தப்பட்டதாக அஸ்வினி வீடியோ பதிவு செய்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து கடந்தாண்டு அக்டோபர் 29ம் தேதி அதே கோயிலில் அவர்களுக்கு மதிய உணவு அளித்து அமைச்சர் சேகர்பாபுவும் சாப்பிட்டார். தொடர்ந்து, அஸ்வினி என்ற பெண்ணிடம் குறைகளை கேட்டறிந்தார். பூஞ்சேரியில் மெய்க்கால் புறம்போக்கில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டு மனை பட்டா, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லையென முறையிட்டார். இதையடுத்து, அந்த பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தவிட்டார்.

 

இந்நிலையில், முதலமைச்சரின் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், பூஞ்சேரி பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ.3.52 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாக்கள் உள்பட மொத்தம்  282 நபர்களுக்கு ரூ.4.53 கோடி மதிப்பீலான அரசு நலத்திட்ட உதவிகளை, சம்பந்தப்பட்ட பகுதிக்கு கடந்தாண்டு நவம்பர் 4ம் தேதி தீபாவளி அன்று நேரில் வந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இந்நிலையில், முதல்வர் வழங்கிய, நலத்திட்டங்களை அதிகாரிகள் யாரும் செயல்படுத்தவில்லை என்றும், நரிக்குறவர்கள் என்பதால் தங்களை வேறு கோணத்தில் பார்ப்பதாகவும், தங்களுக்கு பிழைப்பு நடத்த கடை ஒதுக்கி தர வேண்டுமென அஸ்வினி இரண்டு நாட்களுக்கு முன்பு  செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத்திடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்து அப்பெண்ணை அழைத்து 3 கடைகள் ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றி ஆணைகளை வழங்கினார்.

 

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கூறுகையில், ‘‘கடந்தாண்டு நவம்பர் 4ம் தேதி மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி நரிக்குறவர் பகுதிக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வருகை தந்து, வீட்டுமனை பட்டா, இலவச வீடு கட்டுவதற்கான ஆணை, நலவாரிய அட்டைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்கினார். அப்பகுதியில், ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில், கட்டுமான பணி, சாலைப்பணி, குடிநீர் வசதி கழிப்பறைகளை நவீனமாக்கும் திட்டம் மூலம் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இன மக்களுக்கு செய்துள்ளோம். அவர்கள், வங்கியில் கடன் பெற ரூ.5 லட்சம் ரூபாய்க்கு விண்ணப்பித்தனர். இந்த தொகை, வழங்க வேண்டுமானால் கண்டிப்பாக கடை வைத்திருக்க வேண்டும். அவர்களிடத்தில், கடைகள் இல்லை. இதனால், விண்ணப்பித்த 8 பேருக்கும் கடன் வழங்குவதில் தடை ஏற்பட்டது. கடந்த, இரண்டு தினங்களுக்கு முன்பு அஸ்வினி என்ற பெண் நேரில் வந்து, பிழைப்பு நடத்த எங்களுக்கு கடை ஒதுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இதையடுத்து, நேற்று நேரடியாக வந்து நரிக்குறவர்களுக்கு மூன்று கடைகள் ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: