அரும்பாக்கம் நகை கடன் வங்கி கொள்ளையில் திடீர் திருப்பம் அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் வீட்டில் 3.5 கிலோ நகை பதுக்கல்: முக்கிய குற்றவாளியுடன் தொடர்பு குறித்து பரபரப்பு தகவல்கள்

சென்னை: அரும்பாக்கம் நகை கடன் வங்கியில் 31.7 கிலோ தங்கம் கொள்ளையில் திடீர் திருப்பமாக, குற்றவாளியின் உறவினரான அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்க நகைகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து தங்க நகைகள் இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு வந்தது குறித்தும், குற்றவாளியுடனான தொடர்பு குறித்தும் பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. சென்னை அரும்பாக்கம் நகை கடன் வங்கி கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தீவிர தேடுதல் வேட்டையில், கொள்ளையடிக்கப்பட்ட வங்கியின் மற்றொரு வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றிய முருகன் மற்றும் அவரது பள்ளி நண்பர்களான சூர்யா, பாலாஜி, சந்தோஷ், செந்தில் ஆகியோரை தனிப்படையினர் கைது செய்து 31.7 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், தனிப்படையினர் முதலில் சந்தோஷ் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நகைகள் இல்லை. அதேநேரம், கைது செய்யப்பட்ட மற்றவர்களிடம் நடத்திய விசாரணையில் 3.5 கிலோ தங்கம் சந்தோஷிடம் பிரித்து கொடுத்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் தனிப்படை போலீசார் சந்தோஷை தனியாக வைத்து விசாரணை நடத்தினர். அதில், சந்தோஷ் தனது உறவினரான அமல்ராஜ் என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கூறினார். அமல்ராஜ் என்பவர் தற்போது அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

உடனடியாக தனிப்படை போலீசார் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வசித்து வரும் மேல்மருவத்தூரில் உள்ள அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து வங்கி கொள்ளையில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சந்தோஷ் என்பவனுக்கு அடைக்கலம் கொடுத்து அவர் கொள்ளையடித்த 3.5 கிலோ தங்கத்தை வீட்டில் பதுக்கி வைத்திருந்த இன்ஸ்ெபக்டர் அமல்ராஜை தனிப்படை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்பெக்டர் ஒருவர் வீட்டில் வங்கியில் கொள்ளையடித்த 3.5 கிலோ நகைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்பெக்டர் அமல்ராஜிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: இன்ஸ்பெக்டராக உள்ள அமல்ராஜ், ‘தங்கம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, சந்தோஷ் மனைவி ஜெயந்தியும், எனது மனைவியும் நெருங்கிய உறவினர்கள். எங்கள் வீட்டிற்கு சந்தோஷ் மனைவி வந்து சென்றார். ஆனால் அவர் தங்கத்தை கொண்டு வந்து எனது வீட்டில் வைத்துவிட்டு ெசன்றது குறித்து தெரியாது. எனது மனைவிக்கும் இதுகுறித்து தெரியாது’ என்று திரும்ப திரும்ப கூறி வருகிறார். ஆனால், குற்றவாளியின் மனைவி தனது கணவர் கொள்ளையடித்த 3.5 கிலோ தங்க நகைகளை தனது உறவினரான இன்ஸ்பெக்டர் மனைவிடம் கொடுத்து அதை மறைத்து வைக்கும்படி கூறியுள்ளார். அதன்படி இன்ஸ்பெக்டர் மனைவி உறவுக்கார பெண் கொடுத்த நகைகளை தனது கணவருக்கு தெரியாமல் மறைத்து வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றவாளி சந்தோஷ், இன்ஸ்பெக்டர் அமல்ராஜூடம் அடிக்கடி செல்போனில் பேசியதற்கான உரையாடல்களுக்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. ஆந்த ஆதாரங்கள் அடிப்படையில் தற்போது அமல்ராஜிடம் விசாரணை நடத்தி வருகிறோம். எனவே, சந்தோஷ் மனைவி ஜெயந்தி, அமல்ராஜ் வீட்டிற்கு எப்போது வந்தார். அவர் என்ன கொண்டு வந்தார். அவரை யார் அழைத்து வந்தது. இவ்வளவு நகைகளை அவர் மட்டும் எடுத்துக் கொண்டு வர முடியாது. எனவே அவருடன் வந்த நபர்கள் யார் என்பது குறித்து சந்தோஷ் மனைவியிடமும் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். அதை உறுதிப்படுத்தும் வகையில் சிசிடிவி பதிவுகள் மற்றும் சந்தோஷ் மற்றும் அவரது மனைவி, அமல்ராஜ், அமல்ராஜ் மனைவி பயன்படுத்திய செல்போன்களை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விசாரணை முடிவில் தான் அமல்ராஜ் இந்த கொள்ளை வழக்கில் நேரடியாக தொடர்பில் இருந்தாரா அல்லது மறைமுகமாக தொடர்பில் இருந்தாரா என்பது குறித்து தெரியவரும். அதேநேரம், வீட்டில் 3.5 கிலோ தங்க நகைகள் இருந்தது குறித்து எனக்கு தெரியாது என்று இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் சொல்வது வியப்பாக இருக்கிறது. எனவே அவர் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அமல்ராஜிடமும் அவரது மனைவி மற்றும் குற்றவாளி சந்தோஷ் ஜெயந்தியிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விசாரணைக்கு பிறகு தான் அமல்ராஜ் வீட்டில் நகைகள் எப்படி வந்தது என்பது குறித்து முழுமையாக தெரியவரும். அதேநேரம், குற்றவாளிக்கு உதவியதாக அமல்ராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: