தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உட்பட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்களான தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், அரியலூர், திருச்சி, மதுரை விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்தது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில இடங்களில்/ பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 36- 37 டிகிரி செல்ஸியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27- 28 டிகிரி செல்ஸியஸ் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, திருவள்ளூரில் 6 செ.மீ., காஞ்சிபுரத்தில் 5 செ.மீ., புதுக்கோட்டை, கீரனூர், பூந்தமல்லி, ஆம்பூர், கரூர் மாவட்டத்தில் தலா 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மீனவர்களுக்காக எச்சரிக்கை: ஆந்திர கடலோர பகுதிகளில், குமரி கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில், இடையே 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் 18,19,20 ஆகிய 3 நாட்களுக்கு அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: