கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கும் ராகுல்காந்தி: முன்னேற்பாடுகள் குறித்து கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை

சென்னை: கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கும் ராகுல்காந்தியின் பயண திட்டம் மற்றும் தகுந்த முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்கும், தொடர் தோல்விகளால் துவண்டு போய் உள்ள கட்சிக்கு புத்துயிரூட்டவும் காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில், அகில இந்திய அளவில் பலவீனம் அடைந்துள்ள காங்கிரசை சரிவில் இருந்து மீட்கவும், பலப்படுத்தவும் நாடு முழுவதும் பாதயாத்திரை நடத்த ராஜஸ்தான்     மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

 

அதன்படி ராகுல்காந்தி 148 நாட்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த யாத்திரைக்கான ஏற்பாடுகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது. ராகுலுடன் 300 முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து நடைபயணம் செய்வார்கள். இது தவிர அந்தந்த மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் பாத யாத்திரையில் பங்கெடுப்பார்கள். அவர்கள் மாவட்ட எல்லை வரை உடன் செல்வார்கள்.

அங்கிருந்து அடுத்த மாவட்ட தொண்டர்கள் வரவேற்று யாத்திரையில் பங்கெடுப்பார்கள். இப்படியே இந்த பாத யாத்திரை காஷ்மீர் வரை நடைபெறுகிறது. நாள் ஒன்றுக்கு 25 முதல் 35 கிலோமீட்டர் தூரம் ராகுல் நடந்து செல்லும் வகையில் பயணத்திட்டம் தயாரிக்கப்படுகிறது. ராகுலின் பாதயாத்திரை தமிழகத்தில் 3 நாட்கள் நடைபெற உள்ளது.

 

செப்டம்பர் 7ம்தேதி கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரை புறப்படுகிறார். அங்கிருந்து நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை வழியாக கேரள மாநிலம் செல்கிறார். தொடர்ந்து 3 நாட்கள் தமிழகத்தில் பாதயாத்திரை செல்கிறார். இதற்கான பயண திட்டம் வகுப்பது தொடர்பாகவும், என்னென்ன முன்னேற்பாடுகள் செய்வது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இன்று காலை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்றது.

 

கூட்டத்தில், தமிழக மேலிட பொறுப்பாளார் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளார் வல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாத யாத்திரைக்குழு ஒருங்கிணைப்பாளார் ஜெயக்குமார் எம்பி, மாநில துணை தலைவர் கோபண்ணா, பொன்கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் பிரசாத், சிவராஜசேகரன், டில்லிபாபு, ரஞ்சன்குமார், முத்தழகன் உட்பட முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ராகுல்காந்திக்கு சிறப்பான வரவேற்பளிப்பது, தமிழக காங்கிரசை வலுப்படுத்துவது தொடர்பாக ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்துவது, பாத யாத்திரையின் போது எந்தெந்த பகுதிகளில் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்வது என்பது குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

Related Stories: