திரையரங்குகளில் வெளியானது தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம்!: பட்டாசு வெடித்தும், நடனமாடியும் ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குட்டி, யாரடி நீ மோகினி திரைப்படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் நடிகர் தனுஷ் தனது இரு மகன்களுடன் படத்தை காண வந்திருந்தார். அனிருத், இயக்குநர் மித்ரன் ஜவஹர், நடிகை ராஷிக்கண்ணா ஆகியோரும் வந்திருந்தனர். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருக்கும் என இயக்குநர் மித்ரன் ஜவஹர் தெரிவித்துள்ளார். முதல் காட்சியை காண வந்த ரசிகர்கள் திரையரங்கு வளாகத்தில் பட்டாசு வெடித்து, நடனமாடி கொண்டாடினர். திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியானதால் திரையரங்குகளில் விழாக்கோலம் பூண்டது. அனைத்து தரப்பினர் மத்தியிலும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Related Stories: