ஜம்மு காஷ்மீர் காங். பிரசார குழு தலைவர் சோனியா வழங்கிய பதவியை நிராகரித்தார் குலாம் நபி ஆசாத்: அவமானப்படுத்துவதாக குற்றச்சாட்டு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு செய்து வருகிறது. இத்தேர்தலை சந்திப்பதற்காக காங்கிரஸ், பாஜ, ஜம்மு காஷ்மீர் மாநில கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் காங்கிரஸ் பிரசாரக் குழுவின் தலைவராக குலாம் நபி ஆசாத்தை, கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று முன்தினம் நியமித்தார். இந்த தகவல் வெளியான சில மணி நேரங்களிலேயே, இந்த பதவியை நிராகரிப்பதாக ஆசாத் அறிவித்தார். மேலும், இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் அரசியல் விவகாரக் குழு பொறுப்பையும் ராஜினாமா செய்தார். இது, காங்கிரசில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவர் ஏற்கனவே, அகில இந்திய காங்கிரசின் அரசியல் விவகார குழுவில் இடம் பெற்றுள்ளார். ஜம்மு காஷ்மீர் முதல்வர், ஒன்றிய அமைச்சர், கட்சியில் தேசிய பொதுச் செயலாளர் உட்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீர் பிரசார குழுவின் தலைவராக, தன்னை அவமானப்படுத்தும் நோக்கத்திலேயே  நியமித்து இருப்பதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆசாத், கடந்தாண்டு மாநிலங்களை எம்பி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

Related Stories: