சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிய வழக்குகள் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சீமை கரு வேல  மரங்களை அகற்றக் கோரிய வழக்குகளை, வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் சதீஷ்குமார், மாலா அடங்கிய முழு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு அறிவித்து அதன் அடிப்படையில் மரங்கள் அகற்றப்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு, அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகளை விசாரித்து வருவதால், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தை இரு நீதிபதிகள் அமர்வு கண்காணிக்கலாம் என்று அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்களை அகற்ற கொள்கை வகுத்த போதும், பெரும்பாலான பகுதிகளில் மரங்களை இன்னும் காண முடிகிறது. மரங்களை வேருடன் அப்புறப்படுத்த வேண்டும். இந்த மரங்களை அகற்ற பயன்படுத்தப்படும் ஜே.சி.பி உள்ளிட்ட இயந்திரங்களின் விவரங்கள் குறித்து விளக்கமளிக்க வேண்டும். சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிக்க ஏதுவாக இந்த வழக்குகளை, இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிடப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Related Stories: