ஆரணி நகராட்சியில் ஒப்பந்ததாரரின் அவலம் போர்வெல்லை மூழ்கடித்து சிமென்ட் சாலை அமைப்பு

ஆரணி: ஆரணி நகராட்சியில் ஒப்பந்ததாரர் தரமற்ற நிலையில் போர்வெல்லை மூழ்கடித்து சிமென்ட் சாலை அமைத்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட ஆரணிப்பாளையம் 7வது வார்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.7.50 லட்சம் மதிப்பில் சேதமடைந்த கழிவுநீர் கால்வாயை அகற்றி புதிய கால்வாய் அமைத்தல் மற்றும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடந்தது. இப்பணியை ஒப்பந்ததாரர் ஒருவர் மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்த போர்வெல்லுடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் மற்றும் சிறுபாலம் அமைத்துள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், பயன்பாட்டில் உள்ள போர்வெல் மீது கான்கிரீட் சாலை அமைத்துள்ளீர்களே நியாயமா? என தட்டிக்கேட்டதுடன், பணிகளை முறையாக செய்யும்படி கூறியுள்ளனர். ஆனால், அந்த ஒப்பந்ததாரர் பணிகளை முடிக்காமல் அப்படியே விட்டு சென்றுள்ளார். இதற்கிடையே தரமற்ற நிலையில் அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் சாலையும் உடைந்து போனது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையறிந்த நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி உத்தரவின்பேரில் நகராட்சி ஊழியர்கள் நேற்று கழிவுநீர் கால்வாய் மேல் அமைத்த சிமென்ட் சாலையை உடைத்து, போர்வெல்லின் மேல்பாகத்தை அகற்றினர். மேலும், தற்காலிகமாக போர்வெல் குழாய் மூடி வைக்கப்பட்டது. இந்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: