அனைவரும் ஒன்றுபட வேண்டும்; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஜூலை 11ம் தேதி ஈபிஎஸ் நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, சென்னை மெரினாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; தொண்டர்களின் இயக்கமாக அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். யாரும் வெல்ல முடியாத இயக்கமாக உருவாக்கினார் ஜெயலலிதா.

சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து நாங்கள் நடப்போம். எம்ஜிஆர், ஜெயலலிதா செய்த தியாகங்களை மனதில் வைத்து செயல்படுவோம். தொண்டர்கள் விரும்பியது நடந்திருக்கிறது; தீர்ப்பை ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கு காணிக்கையாக அளிக்கிறோம். அதிமுகவை யார் பிளவுபடுத்த நினைத்தாலும் நடக்காது. அவர்கள் தரப்பு, எங்கள் தரப்பு என்ற பாகுபாடு இல்லை; அதிமுக ஒரே இயக்கம்தான். விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவம் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இருக்கவேண்டும்.

அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் தலைமைப் பண்பு. எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படியே இருக்கும். ஜூன் 23ம் தேதிக்கு முன் யாரெல்லாம் கட்சியில் இருந்தார்களோ அவர்கள் தொடர்ந்து கட்சியில் இருப்பார்கள். அதிமுகவின் கொள்கைகளுக்கு இசைந்து வருபவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் இவ்வாறு கூறினார்.

Related Stories: