காடுபோல் மண்டி கிடக்கும் கருவேல மரங்கள் நீர் நிலைகள் நிரம்பினாலும் விவசாயம் செய்ய வயல்கள் இல்லை: அரிமளம், திருமயம் விவசாயிகள் வேதனை

திருமயம்: அரிமளம், திருமயம் பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பினாலும் விவசாயம் செய்யும் நிலையில் வயல்களும் இல்லை, விவசாயிகளும் இல்லை. இந்நிலையில் விவசாய நிலங்களில் காடுமேல் கருவேல மரங்கள் மண்டி கிடக்கிறது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் பகுதிகள் உள்ள நிலப்பரப்புகள் பெரும்பாலானவற்றை அரசு கையகப்படுத்தி தைல மரங்கள் நடவு செய்து வரும் நிலையில் மீதமிருக்கும் நிலங்கள் அனைத்து பயிற்களுக்கும் ஏற்றவையாகும். இதனால் அப்பகுதியில் விவசாயமே முக்கிய தொழில். இங்கு வாழும் மக்கள் விவசாயத்தையே நம்பி இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் வறட்சி அப்பகுதி விவசாயிகள் வாழ்கை மட்டுமல்லாது சிறு வணிகர்கள் முதல் அப்பகுதி மக்களை நம்பி தொழில் செய்து அனைத்து தொழில்களும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால் படித்த இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்ட நிலையில் சிலர் கூலி தொழிலாளியாக பக்கத்து மாவட்டம், மாநிலங்களுக்கு சென்றுவிடும் அவலம் நடந்து வருகிறது. இதனை சரி செய்ய அதிகாரிகள், தொண்டு நிறுவனம் நடவடிக்கை எடுக்காதது அப்பகுதி இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையை கேள்விகுறியாக்கியுள்ளது.

அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள வெள்ளாறு, பாம்பாறுகள் பருவ காலங்களில் மட்டுமே நீர் வரத்து உள்ளது வழக்கம். இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு இந்த ஆறுகாளால் பெரிய பலன்கள் ஏதும் இல்லை. பருவ காலத்தில் பெய்யும் மழை நீரை கண்மாய், குளங்களில் சேமித்து வைத்து விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையளவு பெருமளவு குறைந்ததோடு குறிப்பாக அரிமளம், திருமயம் பகுதியில் வழக்கத்தை விட மிக குறைந்த அளவே மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் வறண்டதோடு நிலத்தடி நீர் மட்டமும் 300 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. இதனிடையே ஒவ்வொரு வருடமும் பருவ மழையை நம்பி விவசாயம் செய்த விவசாயிகள் ஏமாற்றத்தையும், பெரும் நஷ்டத்தையும் சந்தித்து வந்தனர்.கடந்த பல ஆண்டுகளாக அரிமளம், திருமயம் பகுதியில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக சம்பா நடவு என்ற ஒன்று மறைந்து போனது. தற்போது நடைபெறும் விவசாயம் சம்பா என கூறி கொண்டாலும் அது குறுவை சாகுபடியை ஒத்தே காணப்படுகிறது. சம்பா நடவு என்பது ஜூலை மாதம் தொடங்கி சுமார் 5 முதல் 6 மாதங்கள் வளர்ச்சியைக் கொண்ட நெற்பயிற்கள் சம்பா நடவு என கருதப்படுகிறது. தற்போது நிலவும் பருவ மாற்றம் காரணமாக சம்பா நடவு வளர்ச்சி 3 மாதங்களில் அறுவடையில் முடிந்துவிடுவது என்பது குறிப்பிடதக்கது. எனவே அதனை சம்பா நடவு என அழைப்பதற்கு பதிலாக குறுவை சாகுபடி என்பதே சிறந்ததாகும்.

அரிமளம், திருமயம் பகுதியில் பருவநிலை மாற்றம் காரணமாக பருவ மழை என்பதே இல்லாமல் போனது. அவ்வப்போதே பெய்யும் மழையும் தொடர்ந்து பெய்யாததால் நீர் நிலைகளுக்கு நீர் வருவது கடினமாக உள்ளது. இதனால் நீர் நிலைகள் நம்பி விவசாயம் செய்வது என்பது அப்பகுதி விவசாயிகளுக்கு எட்டாத ஒன்றாக மாறிவிட்டது. இதனை தொடர்ந்து பரமரிப்பு இல்லாததால் விளை நிலைங்கள், நீர் நிலைகள் அனைத்தும் சீமை கருவேல மரங்கள் மண்டி காடு போல் மாறிவிட்டது. இந்நிலையில் தற்போது அரிமளம், திருமயம் பகுதிகளில் பருவ மழை பெய்து கண்மாய்கள் நிரம்பினாலும் விவசாயம் செய்யும் நிலையில் வயல்களும் இல்லை. விவசாயிகளும் இல்லை என்பதே அப்பகுதி விவசாயிகளின் ஒற்றை குரலாக உள்ளது. எனவே சம்பத்தப்பட்ட அதிகாரிகள் விளைநிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற உதவி செய்ய வேண்டும் என ஒரு சில விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூலிக்கு ஆள் கிடைப்பதில்லை

கவுரத்திற்காக குலத்தொழிலான விவசாயத்தை விடக்கூடாது என ஒரு சில விவசாயிகள் விவசாயத்தில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வரும் நிலையில் சில விவசாய பணிகளுக்கு கூலி ஆட்கள் கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் வழக்கத்தை விட அதிக கூலி கொடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து கூலிக்கு ஆட்கள் கூட்டி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே விவசாயத்தில் பல தொழில் புரட்சிகள் வந்தாலும் வரப்பு வெட்ட, களை எடுக்க, உரம், பூச்சி மருத்துகள் தெளிக்க உள்ளிட்ட பணிகளுக்கு மனித சக்தி தேவைப்படுகிறது. அப்போது கூலி ஆட்களை பிடிக்க விவசாயிகள் படும்பாடு சொல்லி மாலாது. அதே சமயம் விவசாயம் செய்வதில் தற்போதுள்ள இளைய தலைமுறையினர் ஆர்வம் காட்டுவதில்லை என்பதும் ஒரு காரணம்.

விவசாயத்தில் மிஞ்சுவது உழைப்பு மட்டும் தான்

எந்த ஒரு தொழில் செய்தாலும் அந்த தொழிலில் லாபம், நஷ்டம் வருவது வழக்கம். ஆனால் தொடர்ந்து நஷ்டம் மட்டுமே கிடைப்பதால் அரிமளம், திருமயம் பகுதி விவசாயிகள் விவசாயத்திற்கு முழுக்கு போட்டு வருகின்றனர். உதாரணத்திற்கு தற்போது ஒரு ஏக்கருக்கு தோராயமாக ரூ.20 முதல் 25 ஆயிரம் வரை செலவாகிறது. இந்நிலையில் ஒரு ஏக்கர் நிலத்தில் 25 முதல் 30 மூட்டை நெல் வருவதாக வைத்துக்கொண்டால் அனைத்து செலவுகளும் போக விவசாயிக்கு ரூ.5 ஆயிரம் லாபம் கிடைப்பதே கேள்விகுறிதான். இதனால் வருடம் முழுவதும் இரவு பகல் பாராமல் பாடுபடும் விசாயிக்கு மிஞ்சுவது உழைப்பு மட்டும் தான் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். அதே சமயம் போதுமான நீர் இல்லாமல் காசுக்கு நீர் பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு எதுவும் மிஞ்சுவது இல்லை.

Related Stories: