திருவொற்றியூர்: மாத்தூர் பகுதியில் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள அரசு நிலத்ைத அதிகாரிகள் மீட்டனர். சென்னை மாநகராட்சி, மணலி மண்டலத்துக்குட்பட்ட மாத்தூர் எம்எம்டிஏ 2வது பிரதான சாலை மற்றும் சின்ன மாத்தூர் சாலையை இணைக்கும் சாலைக்கு நடுவில் அரசுக்கு சொந்தமான 3,684 சதுர அடி நிலம் உள்ளது. இதனை, தனியார் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்து அங்கு குடோன் கட்டியிருந்தார். இதனால், பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டது. எனவே, ஆக்கிரமிப்பிலிருந்து இருந்து இந்த நிலத்தை மீட்டு சாலை அமைக்க வேண்டும், என்று பொதுமக்கள் மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகத்திடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மணலி மண்டல குழு கூட்டத்தில் இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்து மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் கவுன்சிலர்களின் ஒப்புதலுக்கு முன் வைத்தார்.