சென்னையில் பருவமழைக்கு முன்னதாக 70% மழைநீர் வடிகால் பணிகள் முடியும்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னை: சென்னையில் பருவமழைக்கு முன் 70 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறும் என்றும், தற்போது வரை 50 சதவீத பணிகள் முடிந்துள்ளது என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடந்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் புதிதாக மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி கட்ட  வேண்டும் எனவும், இதன் மூலம் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம்  மற்றும் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என  ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது சென்னை மாநகராட்சி வழங்கும் ஊக்கத்தொகை  மாணவர்களின் பெற்றோர்களுக்கு சற்று உதவியாக இருக்கும். மழை காலத்திற்குள்ளாக சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 70 முதல் 80 சதவீதம் நிறைவு பெறும். தற்போது வரை சராசரியாக 50 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை அம்மா உணவகம் மூலமாக செயல்படுத்த மாநகராட்சி கோரிக்கை வைத்துள்ளது. இது தற்போது ஆய்வில் உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன உத்தரவு பிறப்பிக்கிறாரோ அதன் பேரில் திட்டம் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: