முஸ்லிம்கள் விவாகரத்து நடைமுறை ‘தலாக் இ ஹசன்’ முறையற்றது அல்ல: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: ‘இஸ்லாமியர்கள் மூன்று முறை ‘தலாக்’ கூறி, பெண்களை விவாகாரத்து செய்யும் நடைமுறையை சில ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றம் தடை செய்தது. இது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று தனது தீர்ப்பில் தெரிவித்தது. இந்நிலையில், பெனசிர் ஹீனா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘ஒரு மாதத்திற்கு ஒரு முறை ‘தலாக்’ என்று மூன்று மாதங்களுக்கு கூறி, பெண்களை விவாகரத்து செய்யும் ‘தலாக் இ ஹசன்’ என்ற நடைமுறை அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். குறிப்பாக, எனது கணவர் கடந்த ஏப்ரல் 19ம் தேதி இந்த முறையில் தனக்கு விவாகரத்து அனுப்பினார்.

இது, வெறும் ஆண்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய வார்த்தையாக இருப்பதால், அரசியல் சாசனம் எனக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கக் கூடியதாக இருக்கிறது,’ என கூறியுள்ளார். நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘இது முத்தலாக் போன்றது கிடையாது. இஸ்லாமிய பெண்கள் ‘குலா’ என்ற முறையில் தங்கள் கணவரை விவாகரத்து செய்ய முடியும். தலாக் இ ஹசனும் அப்படிப்பட்டது தான். தம்பதிகள் கருத்து வேறுபாட்டால் இணைந்து வாழ விருப்பமில்லை என்று கூறினால், நாங்கள் கூட அவர்களுக்கு விவாகரத்து வழங்குகிறோம். எனவே, தலாக் இ ஹசன் நடைமுறையை முழுமையாக முறையற்றது என கூறி விட முடியாது,’ தெரிவித்து, விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: