சென்னையில் உள்ள ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகலம்; அதிகாரிகள் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை

சென்னை: சென்னையில் உள்ள ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டப்பட்டது. அதிகாரிகள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். நாட்டின் 76வது சுதந்திர தினம் நேற்று வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. அதன்படி, சென்னையில் உள்ள ஒன்றிய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடந்த சுதந்திர தினவிழா  நிகழ்ச்சியில் ஆளுநர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, சிஆர்பிஎப் வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து  அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். சென்னை மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய வளாகத்தில் மாநில நுகர்வோர்  குறைதீர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆர்.சுப்பையா தேசிய கொடி ஏற்றி  விழாவினை சிறப்பித்தார். இதில் பலர் கலந்து ெகாண்டனர். அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பிறகு காவல்துறை மரியாைதையை ஏற்றுக் கொண்டு, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் ஆணைய செயலாளர் விவேகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீபாரிமுனை சுங்கத்துறை அலுவலகத்தில் சுங்கத்துறை தலைமை ஆணையர் எம்.வி.எஸ்.சவுத்ரி தேசிய கொடி ஏற்றி வைத்து சுங்கத்துறை அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். சிறப்பாக பணியாற்றிய சுங்கத்துறை அதிகாரிகள், விழாவில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். பின்னர் மூவண்ண பலூன்களை பறக்க விட்டார். நுங்கம்பாக்கம் சரக்கு, சேவை மற்றும் மத்திய கலால் வரி அலுவலகத்தில் (GST)தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல முதன்மை தலைமை ஆணையர் மண்டலிகா  ஸ்ரீனிவாஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து, ஜிஎஸ்டி அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சென்னை ஆயக்கார் பவானியில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் தேசியக்கொடியை ஏற்றினார்.

ஐசிஎப்இல் நடந்த சுதந்திர தின விழாவில்  ஐசிஎப் பொது மேலாளர் ஏ.கே.அகர்வால் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஐசிஎப் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் அமிர்தஜோதி தேசிய கொடி ஏற்றி சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பிறகு முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் பயன் பெறும் பயனாளிகளின் உதவி தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் இலவச தையல் இயந்திரம் மற்றும் சலவைப் பெட்டி, தாட்கோ திட்டத்தின் கீழ் மானிய உதவி, மாவட்ட பிற்படுத்தப்பட்ேடார் மற்றும் சிறுபான்மையினர் நல அலுலகம் சார்பில் இலவச தையல் இயந்திரம் மற்றும் சலவைப் பெட்டி, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தின் தலைமையகமான பல்லவன் இல்லத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  

அப்போது  சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர், நடத்துனர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஸ் லக்கானி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், மேயர் பிரியா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பிறகு தேசிய மாணவர் படையினர், சாரண, சாரணியரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்த  சுதந்திர தின விழாவில், வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இணை மேலாண்மை இயக்குநர் தங்கவேல், தலைமை பொறியாளர் சண்முக சுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பூரில் உள்ள ரயில்வே மைதானத்தில் தென்னக ரயில்வே சார்பில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே ெபாது மேலாளர் மல்லையா தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சென்னையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலக வளாகத்தில்  நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட அதன் இயக்குநர் சந்தீப் நந்தூரி தேசியக்கொடி ஏறறி வைத்து மரியாதை செலுத்தினார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், இயக்குநர் மணி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கோயம்பேட்டில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும், முதன்மை செயலாளருமான சித்திக் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பிறகு மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் குழந்தைகளில் கடந்த கல்வியாண்டில் 80 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஒருவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அலுவலர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் பவனில் நடந்த சுதந்திர தின விழாவில், தென் மண்டல செயல் இயக்குநர் சைலேந்திரா தேசிய கொடி ஏற்றி வைத்து ராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதில் தமிழக செயல் இயக்குநர் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிறகு நீண்ட நாட்களாக பணியாற்றி வருவோருக்கு விருது, பணியாளர்களின் குழந்தைகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றோருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் காப்பரேஷன் அலுவலகத்தில் நடந்த விழாவில், அதன் நிர்வாக இயக்குநர் அரவிந்த் குமார் தேசிய கொடி ஏற்றி வைத்து மத்திய தொழில் பாதுகாப்புப் படை குழுவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதில் அதிகாரிகள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: