சுதந்திர தின விழா இந்தியாவை வளம்மிக்க நாடாக மாற்ற வேண்டும்; மூத்த தலைவர் சங்கரய்யா வலியுறுத்தல்

தாம்பரம்: சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், விடுதலைப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான, தகைசால் தமிழர் என்.சங்கரய்யா நேற்று குரோம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து கொண்டாடினார். அப்போது அரசு பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிககளை நடத்தி, சங்கரய்யாவிடம் தேசியக்கொடி, பூ கொடுத்து ஆசி பெற்றனர். அதனைதொடர்ந்து சங்கரய்யாவின் தேர்தெடுக்கப்பட்ட உரை, பேட்டிகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கரய்யா கூறுகையில்,‘‘இந்தியாவின் விடுதலை போராட்டத்திற்காக போராடிய கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன்.

ரவீந்திரநாத் தாகூரின் பாடலை கேட்டால் தெரியும் பஞ்சாபி, இந்து, மராட்டிய, திராவிட, உஜ்ஜல வங்கா என அடுக்கிக் கொண்டே போயிருப்பார். பல மொழி பேசக்கூடிய மாநிலங்கள் சேர்ந்துதான் இந்த போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றோம் என்பதை நாம் மனதிலே வைத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் 135 கோடி மக்களுக்கு வாழ்க்கை இருக்கிறது. வாழ்க்கை என்றால் என்ன வயிறார உணவு, குடியிருக்க இடம், பள்ளிகூடம், மருத்துவ வசதி. இந்த வசதிகளை செய்ய வேண்டும் என்றால் விவசாயிகள்,  தொழிலாளர்கள் பாதுகாக்கப் பட வேண்டும். உலக பொருளாதரத்தில், இந்தியாவை தலைச்சிறந்த நாடாக மாற்ற வேண்டும்.

வலதுசாரி, பிற்போக்கு வகுப்பு வாத கட்சிகளை தனிமைப்படுத்தி, மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகள் சேர்ந்து இந்த காரியத்தை நடத்த வேண்டும். போராடி பெற்ற சுதந்திரம் உண்மையிலேயே மக்களுக்கு புது வாழ்வை அளிக்க வேண்டும். அதற்காக உறுதி ஏற்று கொள்வோம்.சுதந்திர போராட்டத்தில் இந்தியா எவ்வாறு வெற்றி பெற்றதோ, அதே போல் சுதந்திர இந்தியாவை வளம்மிக்க நாடாக மாற்ற வேண்டும்.’’என தெரிவித்தார்.

Related Stories: