இரவுநேர மின்வெட்டை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: இரவு நேர மின் வெட்டை தடுக்க சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை மண்டலத்தை சேர்ந்த 33 கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நேற்று நடந்தது. இதன் ஒரு பகுதியாக பூங்கா நகர்  கந்தசாமி கோயிலில் நடந்த சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில்  மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு உணவு அருந்தினார். பின்னர் செய்தியாளர்களிடம்  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:

சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பு வாய்ந்த அறிவிப்புகளை முதலமைச்சர் அரசு ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் மின்வாரியத்தில் ஓய்வு பெற்றவர்கள் நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் என மொத்தமாக  1 லட்சத்து 80 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள்.

மேலும் கோவையில் வருகிற ஆகஸ்ட் 24ம் தேதி 82 ஆயிரம் மக்களுக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.  அன்று மாலையே பொள்ளாச்சியில் மாற்று கட்சியினர் பல்லாயிரம் பேர் முதல்வர் தலைமையில் திமுகவில் இணைகின்றனர்.

சென்னையில் மின்சார துறை சார்பில் இரவு நேரங்களில் பணி மேற்கொள்ளப்படுவதால் சில சமயங்களில் மின் வெட்டு ஏற்படுகிறது. இதை தவிர்க்க சென்னை மாநகராட்சியுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இணைந்து செயல்பட உள்ளோம். இவ்வாறு அமைச்சர் கூறினார். நிகழ்ச்சியில் அறநிலைத்துறை அதிகாரிகள், பொதுமக்கள், திமுகவினர் கலந்து கொண்டனர்.

Related Stories: