இந்தியாவில் விடுதலைக்கு முதலில் குரல் கொடுத்தது தமிழகம்; ஏழை, எளியவர்களின் தேவைகளை உணர்ந்து நிறைவேற்றி வருகிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஏழை எளிய மக்களின் தேவைகளை உணர்ந்து,  அவர்கள் கேட்பதற்கு முன்னதாகவே அவற்றை நிறைவேற்றித் தரும் அரசாக திமுக அரசு  செயல்பட்டு வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நமது இந்திய நாடு, ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றதன் 75வது ஆண்டு நிறைவு விழாவை நாம் இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது. நமது வரலாறு எத்தனையோ தியாகிகளை, போராளிகளைக் கண்டிருக்கிறது. அத்தனை நெருப்பாறுகளையும் அகிம்சையால் கடந்த வரலாறு நம்முடையது. அதனால் தான் உலக அரங்கில் நாம் நெஞ்சு நிமிர்த்தி ‘இந்தியர்கள்’ என்று பெருமையோடு சொல்கிறோம்.

மாபெரும் கோட்டையின் கொத்தளத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றும்போது தமிழ்நாட்டின் முதல்வராக நான் அடையும் மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும்-தமிழன் என்ற அடிப்படையில் அடையும் உணர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை. இந்த இந்தியத் துணைக்கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழகம்தான்.

எளிமை-இனிமை-நேர்மை-ஒழுக்கம்-மனித நேயம்-மதச்சார்பின்மை-சமத்துவம்-சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறார் அண்ணல் காந்தி. இன்றைக்கு நாட்டுக்கு அவசிய, அவசரமான கொள்கைகள் இவைதான். இத்தகைய அனைத்து மனிதநேயக் கொள்கைகளும் கொண்ட ‘திராவிட மாடல்’ ஆட்சியைத்தான் நாம் நடத்தி வருகிறோம். அந்த அடிப்படையில்தான் ஆட்சியும் அமைந்துள்ளது. வளர்ச்சி என்பதும் இதனை அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறோம்.

தொழில் வளர்ச்சி-சமூக மாற்றம்-கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம்- கல்வி-சமூகம்-சிந்தனை-செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி. கடந்த ஓராண்டு காலத்தில் தமிழகம் அடைந்த வளர்ச்சியை நீங்கள் பார்த்தால், அது ஒரே ஒரு துறை வளர்ச்சியாக இல்லாமல் பல்துறை வளர்ச்சியாக அமைந்திருக்கும்.

பெண்கள் அனைவர்க்கும் கட்டணமில்லாப் பேருந்து வசதி தரப்பட்டுள்ளதன் மூலமாக பெண்களின் சமூகப் பங்களிப்பும், பொருளாதார விடுதலையும் தமிழ்நாட்டில் அதிகமாகி இருக்கிறது. இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலமாக லட்சக்கணக்கான குழந்தைகள் மீண்டும் கல்வி நிலையங்களை நோக்கி வரக்கூடிய கல்விப் புரட்சியை நிகழ்த்திக் காட்டி இருக்கிறோம்.இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48 திட்டமானது மரணத்தைத் தொடும் மக்களைக் காப்பாற்றும் மகத்தான திட்டமாக அமைந்திருக்கிறது. எனது கனவுத் திட்டங்களில் ஒன்று தான் நான் முதல்வன் திட்டம். தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரையும் கல்வியால், அறிவால், ஆற்றலால், தனித்திறமையால் ‘நான் முதல்வன்’ என்று ஒவ்வொருவரையும் தலை நிமிர்ந்து செல்ல வைக்கும் திட்டம் ஆகும். கல்லூரிக் கனவு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு விழாவை உலகமே வியக்கும் வகையில் நடத்திக் காட்டி இருக்கிறோம். இதேபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் உலக அளவில் பங்குபெறும் வீரர்களையும், வீராங்கனைகளையும் தமிழகத்தில் தயாரித்து வருகிறோம். அதற்காக ஒலிம்பிக் வேட்டை நடந்து வருகிறது. புத்தக எழுத்தாளர்கள், அறிஞர்கள், பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடையும் வண்ணம் அறிவின் துறையானது செழிப்படைந்து வருகிறது. ஆலயங்களில் அன்னைத் தமிழ் மட்டுமல்ல, தகுதியுள்ளவர் அனைவரும் அர்ச்சகராகும் சமூகநீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. 2500 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இந்த ஓர் ஆண்டில் மீட்டுள்ளோம்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அனைத்துத் தொகுதிக்கும் சென்று பெற்ற மனுக்களில் நடைமுறைக்கு சாத்தியமான மனுக்களில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம். உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சரின் முகவரி திட்டத்தின் மூலமாக சாதாரண, சாமானிய மக்கள் அனைவரின் கோரிக்கையும், என்னை வந்தடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற தனித்துறை உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனின் கோரிக்கையையும், செயல்படுத்தித் தரும் மனிதனாக நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

அதற்கான முயற்சியில்தான் என்னை நான் நித்தமும் ஈடுபடுத்தி வருகிறேன். ஏழை எளிய மக்களின் தேவைகளை உணர்ந்து, அவர்கள் கேட்பதற்கு முன்னதாகவே அவற்றை நிறைவேற்றித் தரும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. நீண்ட காலமாக தீர்க்கப்படாத கோரிக்கைகளை, மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் முன்னுரிமை கொடுத்து தீர்க்க வேண்டும் என்பதுதான் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் நோக்கமாகும்.

இது அனைத்துத் தொகுதிக்கும் சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ள திட்டம்தான். ஆளும் கட்சி வென்ற தொகுதி, எதிர்க்கட்சி வென்ற தொகுதி என்ற பாகுபாடு எங்களுக்கு இல்லை.

Related Stories: