பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு உண்டு: அமைச்சர் மகேஷ் திட்டவட்டம்

சென்னை: பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. இருக்கிற நடைமுறை தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். பாரத சாரண, சாரணியர் மையத்தின் சார்பில், 75வது சுதந்திர தின விழா சென்னை கடற்கரை சாலையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தேசிய கோடியை ஏற்றி   வைத்தார். விழாவில் பாரத சாரண, சாரணியர் அமைப்பின் மாநில முதன்மை ஆணையர் இளங்கோவன், மாநில தலைவர் மணி, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா,  பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் பங்கேற்றனர்.

விழாவில் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பேசியதாவது: தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 பாடங்களை முறையாக நடத்தாமல் அதற்குரிய காலத்தில் பிளஸ் 2 பாடங்களை நடத்தியதால் தான்  பொதுத் தேர்வு என்ற முறை கொண்டு வரப்பட்டது. அதில் குழப்பம் ஏதும் இல்லை. யாரும் அதுகுறித்து குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. அந்த நடைமுறை தொடரும். மாணவர்கள் தன்னம்பிக்கையை இழந்து விடக்கூடாது. கள்ளக்குறிச்சி சக்தி மேனிலைப் பள்ளி விவகாரத்தில் பெற்றோரின் கருத்து கேட்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இன்னும் 25 ஆயிரம் கழிப்பறைகள் கட்ட வேண்டிய நிலை உள்ளது. கிடைக்கும் நிதியைக் கொண்டு  படிப்படியாக கழிப்பறைகள் கட்டப்படும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும்.  கல்வித் தொலைக்காட்சி சிஇஓ, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பின்புலத்தை சேர்ந்தவர் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. அவர் அந்த பின்புலத்தில் இருந்தாலும்  அவருடைய செயல்பாடுகள் சரியாக இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். அதனால் அரசு எல்லா விஷயத்திலும் எச்சரிக்கையாக இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: