விடுமுறை முடிந்து திரும்புவோருக்காக தமிழகம் முழுவதும் 850 சிறப்பு பஸ்கள் இயக்கம்: போக்குவரத்துத்துறை உயர் அதிகாரி தகவல்

சென்னை: மூன்று நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து மீண்டும் நகர்புறங்களுக்கு திரும்புவோரின் வசதிக்காக மாநிலம் முழுவதும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்ந்து 850 சிறப்பு பேருந்துகளையும் கூடுதலாக இயக்கப்படுகிறது. சென்னையில் படிப்பு, பணி, தொழில் நிமித்தமாக பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கியுள்ளனர். குறிப்பாக கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவாளி, பொங்கல், ஆயுத பூஜை, கிறிஸ்துமஸ், ரமலான் போன்ற பண்டிகைகளின்போதும், தொடர் விடுமுறைகளின்போதும் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதையடுத்து சுதந்திர தினத்தையொட்டி 810 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் ஆம்னி பஸ்கள், ரயில், விமானங்களும் இயக்கப்பட்டது. இதில், 2.50 லட்சம் பயணிகளுக்கு மேல் சொந்த ஊருக்கு சென்றனர்.

இந்நிலையில், சொந்த ஊரில் சுதந்திர தினத்தை கொண்டாடியவர்கள் மீண்டும் பணி, கல்வி நிமித்தமாக சென்ைன உள்பட அவரவர் தங்கி இருக்கும் இடங்களுக்கு நேற்று இரவு முதல் மீண்டும் திரும்ப தொடங்கினர். இதையடுத்து அவர்களின் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து நேற்று 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதனால் கோவை, மதுரை, சேலம், திருச்சி போன்ற தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. இதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் போன்ற இடங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.  மற்றொரு புறம் கார், இருசக்கர வாகனம் போன்றவற்றில் சென்றவர்களும் ஒரே நேரத்தில் சென்னைக்கு திரும்பினர்.

இதனால் சென்னையின் நுழைவு பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் சாலை அமைக்கும் பணி, மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கும் இடங்களில் நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு தேங்கி நின்றது. இதனை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் சரி செய்தனர்.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடந்த மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்காக தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்த பொது மக்கள் மீண்டும் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு  திரும்ப வருவதற்கு வசதியாக அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகள் உடன் இன்றும் (நேற்று), நாளையும் (இன்று) 850 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன’ என்றனர்.

Related Stories: