முதல்வர் கான்வாய் வரும்போது ராதாகிருஷ்ணன் சாலையில் கார் தீப்பிடித்ததால் பரபரப்பு; விரைந்து தீயை அணைத்த போலீசார், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு பாராட்டு

சென்னை: முதல்வர் கான்வாய் வரும் போது, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் சென்ற காரில் திடீரென தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சென்று கொண்டிருந்த ஒரு கார், ராயப்பேட்டை ஒன் பாயின்ட் அருகே சென்றபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து புகையுடன் தீப்பற்றியது. காரை ஓட்டி வந்த கிண்டியை சேர்ந்த கவிர் (30) மற்றும் காரில் அமர்ந்து இருந்த சிஷ்மா ஆகியோர் உடனடியாக காரை நிறுத்திவிட்டு பதறியபடி கீழே இறங்கினர்.

அப்போது அந்த வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கான்வாய் வருவதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன், சக்கரவர்த்தி, தலைமை காவலர் ரமேஷ் தீயை அணிக்க முயன்றனர். ஆனாலும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

முதல்வர் வரும் நேரம் என்பதால் அங்கு பதற்றம் நிலவியது. உடனே போலீசார் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உதவியுடன் தீயை அணைத்து அவசர அவசரமாக காரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி சிவசாமி சாலையில் நிறுத்தினர். அடுத்த 2 நிமிடங்களில் முதல்வர் கான்வாய் அந்த வழியை கடந்து சென்றது. முதல்வர் கான்வாய்க்கு எந்தவித தடங்கலுமின்றி காரில் ஏற்பட்ட தீயை விரைந்து  அணைத்து அப்புறப்படுத்திய போலீசாருக்கும், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: