அரும்பாக்கம் வங்கியில் 32 கிலோ தங்கம் கொள்ளை: மேலாளர் உள்ளிட்ட 20 நபர்களிடம் விடிய, விடிய போலீசார் விசாரணை

அண்ணாநகர்: அரும்பாகத்தில் உள்ள தனியார் வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், மேலாளர் உள்பட 20 பேரிடம் விடிய, விடிய போலீசார் விசாரணை நடத்தியதில், வாட்ச்மேன் மீது சந்தேகம் வலுத்துள்ளது. மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலை ரசாக் கார்டன் பகுதியில் பெட் பேங்க் என்னும் தங்க நகைகளுக்கு பணம் கொடுக்கும் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு மேலாளராக சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (38), நகை மதிப்பீட்டாளர், பெண் காசாளர் சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி(36) உட்பட 3 பேர் பணியாற்றி வந்தனர்.

நேற்று மாலை வங்கிக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் வங்கி கதவை திறந்து உள்ளே சென்றபோது வங்கியில் இருந்து ‘’காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’’ என்று கூச்சல் கேட்டதையடுத்து அந்த நபர் அலறியடித்து வெளியே ஓடி வந்தார். பின்னர் தயக்கத்துடன் மீண்டும் உள்ளே சென்று பார்த்தபோது அறைக்குள் இருந்து அலறல் சத்தம் கேட்டதையடுத்து அந்த அறையைத் திறந்தனர்.

அப்போது வங்கியில் இருந்த அறைக்குள் 3 பேர், கை, கால்கள் கட்டப்பட்டு வாயில் துணிகளை வைத்த நிலையில் இருப்பதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்ததும் கூடுதல் கமிஷனர் அன்பு, அண்ணாநகர் துணை கமிஷனர் விஜயகுமார், உதவி கமிஷனர் ரவிச்சந்திரன், ஆய்வாளர்கள் சிபுகுமார், கோபாலகுரு, வேல்முருகன், கிருபாநிதி ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் வந்து விசாரித்தபோது வங்கியில் கொள்ளை நடந்தது தெரியவந்தது. வங்கியில் சென்று பார்த்த போது அங்கு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த  ஊழியர்கள், காவலாளியை மீட்ட  போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், ‘’இதே வங்கியில் மண்டல மேலாளராக இரண்டு வருடமாக  பணிபுரிந்து வந்த சென்னை பாடிக்குப்பம்  பகுதியை சேர்ந்தவர் முருகன்(33) என்பவர் இவரது கூட்டாளிகள் 3 பேருடன் வங்கிக்கு வந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கத்தியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டு விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்’ என்று தெரியவந்தது.

இதுபற்றி போலீசார் கூறியதாவது; இந்த வங்கியில் பாடியை சேர்ந்த முருகன் என்பவர் மேனேஜராக பணியாற்றுகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு வில்லிவாக்கம் கிளைக்கு மாற்றப்பட்டார். நேற்று மதியம் தனது கூட்டாளிகள் 3 பேருடன் வங்கிக்கு வந்தவர் வெளியில் நின்றுகொண்டிருந்த காவலாளி சரவணனுக்கு குளிர்பானம் கொடுத்துள்ளார். அவற்றை வாங்கி குடிக்கும் போது லேசாக கசப்புத்தன்மை தட்டியதால் லேசாக குடித்து விட்டு மற்றதை கீழே கொட்டிவிட்டார். இதன்பிறகு அவர் சற்று மயக்க நிலையில் இருந்தபோது முருகன் தனது கூட்டாளிகளுடன் வங்கிக்குள் சென்று அங்கு தனக்கு தெரிந்த ஊழியர்கள் என்பதால் அவர்களுக்கும் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். அவர்களுக்கு மயக்கம் ஏற்படுவதை அறிந்ததும் கத்தியை காட்டி மிரட்டி 3 பேரையும் அங்கிருந்த அறைக்குள் அழைத்து சென்று கை, கால்களை கட்டிபோட்டு அங்கிருந்து சாவியை எடுத்து லாக்கரில் இருந்த சுமார் 17 கோடி மதிப்புள்ள 32  கிலோ தங்க நகைகளை மூன்று பைகளில் அள்ளிப் போட்டு கொண்டு பைக்கில் தப்பி சென்றுள்ளார்.

அவர்கள் எங்கும் தப்பிச்சென்று விடாமல் இருக்க அனைத்து மாவட்ட எல்லைகளில் உள்ள போலீசாருக்கு முருகனின் புகைப்படத்தை அனுப்பி உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மோப்ப நாய் அர்ஜுன் வரவழைக்கப்பட்டு சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றுவிட்டது. வங்கியில் நகைகள் கொள்ளைபோன சம்பவத்தையடுத்து அடகு வைத்த வாடிக்கையாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் வங்கியின் முன்பு குவிந்தனர். பாதிக்கம்பட்ட நபர்களிடம் நகைகள் விரைவாக மீட்டுத் தரப்படும் என்று அறிவித்துள்ளோம். இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதனிடையே கொள்ளை சம்பவம் தொடர்பாக வங்கியின் மேலாளர் சுரேஷ், காவலாளி சரவணன், முருகன் மனைவி மற்றும் தாயார் உட்பட 20க்கும் மேற்பட்டவர்களிடம் விடிய, விடிய போலீசார் விசாரணை நடத்தினர்.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகனின் கூட்டாளி ஒருவரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் விரைவில் வாட்ச்மேன் சரவணன் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது. போலீசார் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘’வங்கியில் நடந்த கொள்ளை குறித்து முக்கிய குற்றவாளியான முருகன், இவரது கூட்டாளி பாலாஜியை கைது செய்ய ஆந்திரா, கர்நாடகா, உ.பி மற்றும் பெங்களூருக்கு 6 தனிப்படை விரைந்துள்ளனர். வங்கியில் கொள்ளைப்போன நகைகளை கண்டிப்பாக மீட்டு தருவோம். வாடிக்கையாளர்கள் யாரும் பயப்பட தேவையில்லை’ என்றார். இந்த நிலையில், வங்கி கொள்ளை சம்பந்தமாக அரும்பாக்கம் காவல்நிலையத்தில் கூடுதல் கமிஷனர் அன்பு இன்று 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Related Stories: