கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே புதிய அணைகளை கட்டுவது குறித்து ஆந்திர முதல்வருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே புதிய அணைகளை கட்டுவதை ஆந்திர அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாடு அரசை ஆலோசிக்காமல் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே எந்த ஒரு திட்டத்தையும் ஆந்திர அரசு செயல்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.

சித்தூர் முக்கால பண்டிகை காதாரபள்ளி ஆகிய இடங்களில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளதால் குடிநீர் தேவைக்கு கொசஸ்தலை ஆற்றின் நீரை நம்பியுள்ள சென்னை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கொசஸ்தலை ஆறு இரண்டு மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதி என்பதால் புதிய திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசின் அனுமதி பெறுவது அவசியம் என்று கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொசஸ்தலை மற்றும் அதன் கிளை ஆறுகளில் புதிய அணைகள் கட்டுவது பூண்டி நீர்தேக்கத்திற்கான நீர்வளத்தை பாதிக்கும் என்றும் சென்னை சுற்று வட்டாரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கும் பாதிப்பி ஏற்படும் என்று முதலமைச்சர் அதில் குறிப்பிட்டுள்ளார். எனவே ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேரடியாக தலையிட்டு புதிய அணைகள் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே புதிய அணைகள் கட்டுவதற்காக ஆந்திர அரசு ரூ.177 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதால் அத்திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தத்து குறிப்பிடத்தக்கது.

Related Stories: