பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி காலமானார்

சென்னை: பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி மும்பையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 87. அந்த காலத்தில் தன்னுடைய வசீகர குரலால் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் சரோஜ் நாராயணசுவாமி. ‘ஆகாஷ் வாணி.. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்சுவாமி..’ என தனது கம்பீர குரலால் வானொலியில் அவர் கூறுவது பலரையும் கவர்ந்து இழுத்தது. அகில இந்திய வானொலியில் 35 ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

 ஓய்வுக்குப் பின் தமிழ் படங்கள், ஆவணப்படங்களுக்கு குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில் மும்பையில் வசித்து வந்த அவர் நேற்று காலமானார். சரோஜ் நாராயணசுவாமியின் சொந்த ஊர் தஞ்சாவூர். இவர் பிறந்து வளர்ந்து படித்தது அனைத்தும் மும்பையில் தான். பிஏ ஆங்கிலம் படித்தவர் எனினும் தமிழில் புலமை பெற்றிருந்தார். அதன்பிறகு திருமணம் முடிந்து வானொலி பணிக்காக டெல்லியில் குடியேறினார். பணி ஓய்வுக்கு பின் மும்பையில் வசித்து வந்தார். இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்தார். ஒலிபரப்புத்துறையில் அவர் பணியாற்றியதை பாராட்டி இவருக்கு 2009ல் தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

Related Stories: