நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு; கோயில் அகற்றம் வழக்கு தொடர்ந்தவரின் வீடும் இடிப்பு

பெரம்பூர்: ஓட்டேரியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோயில் மாநகராட்சி அதிகாரிகளால் அகற்றப்பட்டது.  வழக்கு போட்டவரின் வீடும் இடிக்கப்பட்டது.  சென்னை ஓட்டேரி கொசப்பேட்டை ராமானுஜம் கார்டன் தெரு பகுதியை சேர்ந்தவர் பத்மஜா. இவரது வீட்டின் அருகில்  பெரிய பாளையத்தம்மன் ஆலயம் உள்ளது. இந்த கோயில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், அதனை அகற்றக்கோரியும் பத்மஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை உரிய முறையில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி புரசைவாக்கம் தாசில்தாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இதனை அடுத்து தாசில்தார் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தபோது சாலையை ஆக்கிரமித்து 144 சதுர அடி பரப்பில் கோயில் கட்டப்பட்டுள்ளதும், புகார் தெரிவித்து வழக்கு தொடுத்த பத்மஜா என்பவரின் வீடு 200 சதுர அடியில் சாலையை ஆக்கிரமித்து கட்டி இருப்பதும் தெரிய வந்தது. இந்த விவரம் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து ஆக்கிரமிப்பு இடங்களை இடித்து சாலையை மீட்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் நேற்று காலை திருவிக நகர் மண்டல செயற்பொறியாளர் சரவணன் தலைமையில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் மாதவ் சங்கர் உதவி பொறியாளர் குமரன் உள்ளிட்டோர், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோயிலையும், வீட்டையும் இடித்தனர்.

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசன் தலைமையில் சுமார் 80க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நேற்று காலை 10 மணிக்கு தொடங்கப்பட்ட பணி மாலை 5 மணி வரை நடைபெற்று கோயில் மற்றும் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீட்டின் முன் பகுதி இவை அனைத்தும் இடிக்கப்பட்டு சாலை முழுவதுமாக மாநகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. கோயிலை இடிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தவரின் வீட்டின் முன் பகுதியையும் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து சாலையை மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: