குடும்ப தகராறில் விபரீதம் மனைவியின் கழுத்தை அறுத்த கணவனுக்கு சரமாரி கத்திகுத்து; போலீசார் விசாரணை

புழல்: செங்குன்றம் அருகே பாடியநல்லூர், பெரியார் நகரில் ஒரு தனியார் பாட்டில் கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 18க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்து வேலை பார்க்கின்றனர். இவர்களுடன் அதே மாநிலத்தை சேர்ந்த திரேந்திர திஸ்வால் (35) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி காயத்ரி பிஸ்வால்(32). கடந்த சில மாதங்களாக திரேந்திர திஸ்வால் ஒழுங்காக வேலைக்கு செல்லவில்லை. இதனால், குடும்பம் நடத்துவதற்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக கணவன் - மனைவி இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவர்களிடையே   தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தரேந்திர திஸ்வால், அருகில் இருந்த கத்தியால் தனது மனைவியின் கழுத்தை அறுத்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த காயத்ரி, தனது கணவரிடம் இருந்து கத்தியை பிடுங்கி, சரமாரியாக அவரை குத்தினார். இதனால், படுகாயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தனர். சக ஊழியர்கள் அவர்களை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில்,  இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின்பேரில், செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். தம்பதியர் ஒருவரை சரமாரியாக கத்தியால் தாக்கிகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: