ராமதண்டலம் கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்

திருவள்ளூர்: பூண்டி ஒன்றியம், ராமதண்டலம் கிராமத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவர் உத்தரவின்பேரில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் மற்றும் சில்ரன் பிலீவ் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் சங்கீதா உளவள ஆலோசகர் ஜான்சி, ராமதண்டலம் ஊராட்சி மன்ற தலைவி சுமதி சிவதாஸ், வார்டு உறுப்பினர்கள் தட்சிணா மூர்த்தி, ஞான சுந்தரி, பூவேந்தன், ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன இயக்குனர் ஸ்டீபன், கள ஒருங்கிணைப்பாளர்கள் கவிதா, பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமிற்கு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர், மூத்த உரிமையியல் நீதிபதி சாண்டில்யன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசும்பொழுது, `சட்டப்பணிகள் ஆணைக்குழு சட்டம் சார்ந்த மற்றும் சட்டம் சாராத பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு உதவி செய்கிறது.

குடும்ப பிரச்னை, சொத்து பிரச்னை, அடிப்படை வசதிகள், சட்டத்தை பற்றி புரிந்து கொள்ளுதல், அரசுநல திட்டங்களை பெறுதல் ஆகியவைகளுக்கு சட்டப்பணிகள் ஆலோசனை குழுவினை அணுகலாம். குழந்தைகள், பெண்கள் சம்பந்தமான சட்டங்கள் குறித்தும், சட்ட விழிப்புணர்வை பொதுமக்கள் பெறுதல் அவசியம்’என்றார். குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் தவிர்த்தல், தடுத்தல், 18 வயதிற்குள் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் ஏற்படும் பின்விளைவுகள், குழந்தைகள் குடும்பத்திலும் சமுதாயத்திலும் சந்திக்கும் சவால்கள், குழந்தைகளின் பிரச்னைகளுக்கு தகவல் தெரிவிக்ககூடிய சைல்டு லைன் 1098, பெண்களுக்கான ஒன் ஸ்டாப் சேவை எண் 181 பற்றியும் எடுத்து கூறப்பட்டது. இந்த முகாமில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி ஆசிரியைகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: