நிழற்குடை இல்லாத கேளம்பாக்கம் பஸ் நிறுத்தம்; நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தல்

திருப்போரூர்: சென்னைப் புறநகர் பகுதியான கேளம்பாக்கத்தில் இருந்து தாம்பரம், தி.நகர், அடையாறு, கோயம்பேடு, உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளொன்றுக்கு 270 நடைக்கும் மேலாக இந்த பேருந்துகள் இயங்குகின்றன. இதுமட்டுமின்றி, மாமல்லபுரம், திருப்போரூர், மானாம்பதி, கரும்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளும் கேளம்பாக்கம் வழியாக இயக்கப்படு கின்றது. இதன் காரணமாக எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாக கேளம்பாக்கம் உள்ளது. கேளம்பாக்கம் மற்றும் கோவளம் சந்திப்பில் அதிக வாகன ெநரிசல் ஏற்பட்டதால் ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டு கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் குறிப்பிட்ட தூரம் சென்று சுற்றி வரும் வகையில் போக்குவரத்து முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்துப் பேருந்துகளும் கேளம்பாக்கம் காவல் நிலையம் அருகில் ஓஎம்ஆர் சாலையின் ஓரமாக நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.

இந்த ேபருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் சாலையோரமே நிற்க வேண்டிய நிலை உள்ளது. கோடைக் காலங்களில் ஓரளவுக்கு கடைகளின் ஓரமாக நின்று சமாளித்து விடும் பயணிகள் மழைக் காலங்களில் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். குழந்தைகள் மற்றும் கைப்பைகளை சுமந்து வரும் பெண்கள் பேருந்து வரும் வரை சிறிது நேரம் கூட அமர முடியாமல் நீண்ட நேரம் வெயிலில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கேளம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பேருந்து நிழற்குடை அமைக்க தயாராக இருந்தும் போதிய இடம் இல்லாத நிலையும் இதற்கு காரணமாக உள்ளது. ஆகவே, நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் கேளம்பாக்கத்தில் மாநகரப் பேருந்துகள் நிற்க உரிய இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்றும் அதுவரை தற்காலிக நிழற்குடையாவது அமைத்துத் தர வேண்டும் என்றும்  பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: