வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் திடீரென பிரேக் போட்டதால் லாரிகள் அடுத்தடுத்து மோதல்; இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் மீட்பு

புழல்: புழல் அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், நேற்று காலை எண்ணூர் துறைமுகம் நோக்கி ஆயில் டேங்கர் லாரியும்,  டிப்பர் லாரியும் வேகமாக சென்று கொண்டிருந்தன. பெரியமுல்லைவாயல் சாலை சந்திப்பில் முன்னால் சென்ற ஆயில் டேங்கர் லாரி டிரைவர்  திடீரென பிரேக் போட்டார். இதனால், பின்னே அசுர வேகத்தில் வந்த டிப்பர் லாரி, கண்ணிமைக்கும் நேரத்தில்  டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில், இரண்டு லாரிகளும் அப்பளம்போல் நொறுங்கின. டிப்பர் லாரி டிரைவர்  சக்ரபாணி இடிபாடுகளில் சிக்கி கொண்டார். அவரது இரண்டு கால்கள் நசுங்கி வலியால் அலறி துடித்தார்.  இதைப்பார்த்த அவ்வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகள் சோழவரம் போலீசார் மற்றும்  செங்குன்றம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள்  கிரேன் உதவியுடன் விபத்தில் சேதமான 2 லாரிகளையும் தனித்தனியே பிரித்து அகற்றினர். அதன்பின்னர், இடிபாடுகளில் சிக்கி,  கால்கள் நசுங்கிய நிலையில், உயிருக்கு போராடிய      சக்ரபாணியை சுமார் ஒரு மணி நேர கடும் போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்டனர். பின்னர், அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இப்புகாரின்பேரில், சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: