ஆடித் திருவிழாவை முன்னிட்டு சேலத்தில் பிரசித்தி பெற்ற வண்டி வேடிக்கை கோலாகலம்: மண்ணுலகில் வலம் வந்த விண்ணுலகம்

சேலம்: சேலம் குகையில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு, நேற்றிரவு வண்டிவேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதில், பல்வேறு கடவுள்களின் வேடமணிந்து, புராண நிகழ்ச்சிகளை தத்ரூபமாக சித்தரிக்கும் வகையில் பக்தர்கள் ஊர்வலமாக வந்ததை பொதுமக்கள் கண்டு களித்தனர். சேலம் மாநகரில் மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் ஆடித்திருவிழா களைகட்டியுள்ளது.

இதனையொட்டி குகை மாரியம்மன், காளியம்மன் கோயிலில், புகழ்பெற்ற வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நேற்றிரவு கோலாகலமாக நடந்தது. இதில் பல்வேறு கடவுள்களின் வேடம் அணிந்த பக்தர்கள், புராண நிகழ்ச்சிகளை தத்ரூபமாக சித்தரிக்கும் விதமாக, வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில், ஊர்வலமாக வந்தனர். வண்டி வேடிக்கை கண்டு களிப்பதற்காக, சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர்.

சேலம் ஜவுளிக்கடை பஸ் ஸ்டாப்பில் இருந்தும், பிரபாத் பெரியார் வளைவில் இருந்தும் குகையில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோயில்களை நோக்கி, திருச்சி மெயின்ரோட்டில் அலங்கார வண்டிகள் வலம் வந்தன. அந்தந்த பகுதி நண்பர்கள் குழுவின் சார்பில், மொத்தம் 12 வண்டிகள் இதில் கலந்து கொண்டன. குறிப்பாக, ஜிக்கா பக்கா நண்பர்கள் குழுவின் சார்பில் வராக மூர்த்தி, ஹிரண்யாக்‌ஷசனை சம்ஹாரம் செய்து பூமியை மீட்டு, லட்சுமி வராகராக சிவனை வணங்கும் காட்சியை தத்ரூபமாக வேடமணிந்து வந்த பக்தர்கள், பொதுமக்களை பெரிதும் கவர்ந்தனர்.

இதேபோல், அம்பலவாணர் சுவாமி கோயில் தெரு சார்பில் வந்த வண்டியில், லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகிய முப்பெரும் தேவியர் காட்சியளித்தனர். புலிக்குத்தி தெரு நண்பர்கள் சார்பில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண கோலத்தில், சுந்தரேஸ்வரர், மீனாட்சி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு மற்றும் பிரம்மா போன்று வேடமணிந்து வந்தது பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது. மேலும், ஆண்டிசெட்டி தெரு சார்பில் வந்த வண்டியில், நரசிம்ம அவதாரத்தில் பக்தர்கள் வேடமணிந்து வந்தனர்.

சிறப்பாக காட்சியளித்த வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக வண்டிவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு வண்டிவேடிக்கையை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், திருச்சி மெயின்ரோட்டில் கூட்டம் அலைமோதியது. இதனையொட்டி, அவ்வழியாக மாலை 6.30 மணிக்கு மேல் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், குற்றச்செயல்கள் எதுவும் நிகழாமல் தடுக்கும் விதமாக, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: