காஞ்சிபுரத்தில் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பால் கழிவுநீர் குட்டையான ரங்கசாமி குளம் சீரமைக்க பொதுக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள ரங்கசாமி குளம் தற்போது கழிவுநீர் குட்டையாக மாறி தூர் நாற்றம் வீசி வருகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கோயில்கள் நிறைந்த நகரான காஞ்சிபுரத்தில் ஒவ்வொரு கோயிலுக்கும் குளம் இருக்கும். அந்த குளங்கள் கோயில் விழாக்களில் தீர்த்தவாரி உள்ளிட்ட விசேஷங்களுக்கு பயன்படுவதோடு அப்பகுதி குடியிருப்புகளுக்கு நீராதாரமாகவும் விளங்கி வந்தன. அத்தகைய குளங்களின் தண்ணீர் வரக்கூடிய வரத்துக் கால்வாய்கள் தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டதால் குளங்கள் வறண்டு போனது. இதனால், அப்பகுதிகளில் நிலத்தடி நீரும் அதல பாதாளத்துக்குப் போனது. இந்நிலையில், காஞ்சிபுரம் நகரத்தின் மையப் பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் ரங்கசாமி குளம் அமைந்துள்ளது. இதில், தண்ணீர் தேங்காததால் நகரப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக குறைந்து விட்டது.

இதற்காக அண்ணா நூற்றாண்டு விழாவின்போது ரூ. 23 லட்சம் சிறப்பு நிதியின் மூலம், குளத்தின் நீர் வரத்து கால் வாய்கள், படித்துறைகள் மற்றும் அதனருகே பூங்கா ஆகியவற்றை நகராட்சி நிர்வாகம் அமைத்தது. ஆனால், நீர்வரத்து கால்வாய்களை சரியான திட்டமிடுதலுடன் அமைக்காத காரணத்தால் மழைநீர் குளத்துக்கு செல்லாமல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், விளக்கடிகோயில் தெரு பகுதியில் மழைக்காலங்களில் அதிக மழைநீர் சாலையில் தேங்குவது வாடிக்கை. இதை ரங்கசாமி குளத்துக்கு திருப்பி விடும் வகையில் சாலையோரம் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த கால்வாயை அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் ஆக்கிரமித்ததால் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் குளத்துக்கு செல்ல வழியில்லாமல் போனது.

இதன்காரணமாக, அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கலந்து மழைநீர் வீணாகிறது. மேலும், தற்போது ரங்கசாமி குளத்தில் அருகில் உள்ள ஓட்டல் மற்றும் காந்தி சாலையில் உள்ள பிரபலமான ஓட்டல் ஆகியவற்றின் கழிவுநீரை கொண்டுவந்து ரங்கசாமி குளத்தில் விடுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக இறையன்பு இருந்தபோது குளத்துக்கான நீர்வரத்து கால்வாய்களை சீரமைத்து சரிசெய்தார். ஆனால், தற்போது மீண்டும் புதர்மண்டி கழிவுநீர் குட்டையாக மாறிஇருப்பது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

Related Stories: