அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றில் 69 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

அண்ணாநகர்: அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றின் கரையில் கட்டப்பட்டிருந்த மேலும் 69 வீடுகள் இடிக்கப்பட்டு, அவர்கள் மாற்றிடத்தில்  குடியமர்வு செய்யப்பட்டனர். சென்னையில் உள்ள கூவம் ஆற்றில் மழைக்காலத்தின்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறிதால் கரையோரம் வசித்துவந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து கூவம் ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்படி, சென்னை அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றின் கரையோரம் உள்ள முத்துமணியம்மன் நகரில் இருந்த சுமார் 650 ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். அங்கு வசித்துவந்தவர்கள், தங்களது வீட்டு உடமைகளை மாநகராட்சி ஏற்பாடு செய்துகொடுத்த வாகனங்களில் ஏற்றிச்சென்று மாற்றிடமான சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புக்கு கொண்டு சென்றனர். இவ்வாறாக 550 பேர் மறுகுடியமர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், அண்ணாநகர் 8வது மண்டல அதிகாரி முருகேசன் தலைமையில் கொண்ட அதிகாரிகள் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் அமைந்துள்ள 69 வீடுகளை இடித்து அப்புறப்படுத்தி, அவர்களை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் மறுகுடியமர்வு செய்தனர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபோது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அண்ணாநகர் போலீஸ் துணை ஆணையர் விஜயகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி சார்பில் மறுகுடியமர்வு செய்யப்பட்டவர்களுக்கு மூன்று வேளையும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

Related Stories: