நிதி நிறுவன ஊழியர்களே கைவரிசை காட்டியது அம்பலம்: ரூ.26 லட்சத்தை மோசடி செய்த பெண் ஊழியர் கைது

கோவை: நிதி நிறுவனங்களில் அடகு வைக்க கொடுக்கப்படும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வைத்து நிதி நிறுவனத்திலேயே பணியாற்றும் மேலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் நூதன மோசடியை அரங்கேற்றியுள்ளனர். 597 கிராம் போலி நகைகளை அடகு வைத்து  பண மோசடியில் ஈடுபட்டவர்களில் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. கேரளாவைச் சேர்ந்த பிரபல நிதி நிறுவனமான ICL தமிழ்நாட்டில் கிளைகளை அமைத்து நகைகளை அடகு பிடித்து வருகிறது.

கோவை குனியமுத்தூரில் உள்ள ICL நிறுவன கிளையில் கார்த்திகா, சரவணக்குமார், சத்யா ஆகியோர் பணியாற்றி வந்தனர். பரிவர்த்தனைகளை சரிபார்க்கும் வகையில் நிதி நிறுவன கிளையில் சில நாட்களுக்கு முன்னர் வருடாந்திர தணிக்கை நடைபெற்றுள்ளது.அப்போது நகை மதிப்பீட்டில் குளறுபடியும், லாக்கரில் போலி நகையும் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.

உடனடியாக நிறுவனத்தில் பணியாற்றியவர்களிடம் விசாரணை நடத்திய போது குனியமுத்தூர் கிளையில் பணியாற்றிய கார்த்திகா, சரவணக்குமார், சத்யா ஆகியோர் கூட்டு சேர்ந்து மோசடியை அரங்கேற்றியது தெரியவந்தது. ஏற்கனவே அடகு வைத்தவர்களின் ஆவணங்களை வைத்து போலியாக அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். 597 கிராம் போலி நகைகளை 25 பொட்டலங்களாக ரூ.26 லட்சத்துக்கு முன்னாள் வாடிக்கையாளர்கள் பெயரில் அடகு வைத்தது தெரியவந்தது.

இது குறித்து நிதி நிறுவனம் தரப்பில் கோவை மாநகர் குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யாவை கைது செய்தனர். மேலும் போலி நகைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தலைமறைவாக உள்ள கார்த்திகா, சரவணக்குமாரை பிடிக்க  தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: