வானூர் அருகே திமுக நிர்வாகி வெட்டிக்கொலை: 3 பேர் கைது 4 பேருக்கு வலை

வானூர்: வானூர் அருகே திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் மர்ம நபர்களால் சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா ஆரோவில் அருகே கோட்டக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (55). சத்துணவு பொறுப்பாளர். கடந்த பத்தாண்டுகளாக திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினராக இருந்தார். இவரது மனைவி சரஸ்வதி. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி. கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். இவர்களின் மகன் சுகவனன்(25), வெளிநாட்டில் டாக்டருக்கு படித்துள்ளார்.

இந்நிலையில் ஜெயக்குமார் நேற்று காலை திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதிக்கு டீ குடிப்பதற்காக பைக்கில் சென்றார். காலை 6.30 மணி அளவில் இரும்பை சிவன் கோயில் அருகே அவரை வழிமறித்த மர்ம நபர்கள், அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு ஊரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னையை ஜெயக்குமார் பேசி தீர்த்து வைத்துள்ளார்.

இதில் அதிருப்தி அடைந்த ஒரு தரப்பினர் அவரை கொலை செய்திருக்கலாம், என்று கூறப்படுகிறது. கொலை நடந்த இடத்திலும், சொந்த ஊரான கோட்டக்கரையிலும், ஜெயக்குமார் உடல்  வைக்கப்பட்டிருந்த ஜிப்மர் மருத்துவமனையிலும் ஏராளமான பொதுமக்கள் மற்றும்  திமுகவினர் திரண்டதால் பதற்றம் நிலவியது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மனோஜ்  (20), அவரது தாய் சரஸ்வதி, பெரியம்மாசாந்தி ஆகியோரை போலீசார் கைது  செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து இவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: