செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் ஆண்கள், பெண்கள் அணிக்கு தலா ரூ.1 கோடி பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது. இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் பொதுப்பிரிவில் ‘இந்திய பி அணியும்’ பெண்கள் பிரிவில் ‘இந்திய ஏ அணியும்’ என இரண்டு அணிகள் பதக்கம் வென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

44வது பன்னாட்டு சதுரங்க விளையாட்டு போட்டிகளில் பொதுப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ‘இந்திய பி அணிக்கும்’, பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ‘இந்திய ஏ அணி (பெண்கள்)’ ஆகிய இரண்டு அணிகளுக்கும் பரிசு தொகையாக தலா ரூ.1 கோடி‌‌ வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: