தொடர் நீர்வரத்தால் கொள்ளிடம் பழைய பாலத்தின் 17வது தூண் இடிந்து விழுந்தது

திருச்சி: தொடர் நீர்வரத்தால் கொள்ளிடம் பழைய பாலத்தின் 17வது தூண் நேற்று இடிந்து விழுந்தது. திருச்சி திருவானைக்காவல் செக்போஸ்ட் அருகே கொள்ளிடம் ஆற்றில் 12.5 மீட்டர் அகலம், 792 மீட்டர் நீளத்தில் 24தூண்களுடன் 1928ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த பாலம் வலுவிழந்து காணப்பட்டதால் 2007ம் ஆண்டு கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து 2016ம் ஆண்டில் புதிய பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. புதிய பாலம் திறக்கப்பட்டதற்கு பிறகு பழைய பாலம் நடைபயிற்சி செய்வதற்காக மட்டும் திறந்து விடப்பட்டது.

2018ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் பழைய பாலத்தின் 18, 19வது தூண்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் கொள்ளிடம் பழைய பாலத்தின் 17வது தூண் இடிந்து விழுந்தது. அதிகளவில் தண்ணீர் செல்வதால் இடிந்து விழுந்த பாலம் மற்றும் தூண்கள் மூழ்கியது. கொள்ளிடம் பாலத்தில் 17வது தூண் இடிந்து விழுந்த இடத்தை அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர்.

Related Stories: