ஒலிம்பிக் பதக்கம் வெல்வோரை உருவாக்க ரூ.22 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் மற்றும் ஒலிம்பிக் பதக்கங்களை வெல்வோரை உருவாக்கும் பொருட்டு, ‘‘ஒலிம்பிக் தங்க வேட்டை’’ என்ற திட்டம் ரூ.22  கோடி மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். 44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அனைவரும் மெச்சத்தக்க வகையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை மிக குறுகிய காலத்தில் தமிழக அரசு வெகு சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. கடந்த 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இதே நேரு உள் விளையாட்டு அரங்கில் மாபெரும் கண்கவர் கலைநிகழ்ச்சிகளோடு செஸ் போட்டியை தொடங்கி வைத்தார். இங்கு வருகை தந்த செஸ் விளையாட்டு வீரர்களும், பயிற்சியாளர்களும் தமிழ்நாடு அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், வசதிகள் குறித்து சமூக ஊடகங்களில் பாராட்டி நன்றி தெரிவிக்கும்போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு இணையானது எதுவும் இல்லை.

போட்டியில் வெற்றிபெற்றவர்களைவிட நான் அதிகமான மகிழ்ச்சியில் இருக்கிறேன். 4 மாதங்களில் பன்னாட்டு விளையாட்டை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது. உலகமே விளக்கும் அளவுக்கு போட்டியை நடத்தி முடித்து விட்டோம். இதற்கு காரணமான தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதனையும், துறை செயலாளர் அபூர்வாவையும், அவர்களுக்கு துணையாக நின்ற அரசு அதிகாரிகளையும் நான் மனதார பாராட்டுகிறேன். இந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியாக மட்டுமல்ல, இந்தியாவில் நடைபெறும் பன்னாட்டு திருவிழாவைபோல நடந்துள்ளது.

விளையாட்டில் தமிழ்நாட்டை ஒரு முன்னோடி மாநிலமாக ஆக்குவதற்கு திராவிட மாடல் தமிழக அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் மற்றும் ஒலிம்பிக் பதக்கங்களை வெல்வோரை உருவாக்கும் பொருட்டு, ஒலிம்பிக் தங்க வேட்டை என்ற திட்டம் ரூ.22 கோடி மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஒருவரின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் விளையாட்டு மிக முக்கிய பங்காற்றுகிறது என்பதை தமிழ்நாடு அரசு நன்கு உணர்ந்துள்ளது. அதனால்தான் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மினி விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு பன்னாட்டு பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வடசென்னையிலும், கோபாலபுரத்திலும் குத்துச்சண்டை அகடமிகள் உருவாக்கப்பட உள்ளன. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவலுக்கு பிரமாண்டமான தனி விளையாட்டு களம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. சர்வதேச கடற்கரை போட்டிகளையும் நடத்த தமிழகம் தயாராக உள்ளது. மேலும் நம் மண்ணின் விளையாட்டுக்களை உலக அரங்கிற்கு கொண்டு செல்வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

தொடக்க விழாவில் உங்கள் அனைவர் முன்பும் நடத்தி காண்பித்த சிலம்பாட்டத்துக்கு தேசிய அங்கீகாரம் பெற்றுத் தரவும் முயன்று வருகிறோம். 12 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மற்றும் கபடி, சிலம்பாட்டம் ஆகிய பாரம்பரிய விளையாட்டுக்கான மாநில மற்றும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் விரைவில் நடைபெறும். அதற்குள் முடிந்துவிட்டதா என்று ஏங்கும் வகையில் மிக சிறப்பாக இந்த போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன. வெற்றிபெற்ற வீரர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் வெற்றிபெற போகும் வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். எதிலும் வெற்றி தோல்வி முக்கியமல்ல, பங்கேற்புதான் முக்கியமானது என்று பேசினார்.

Related Stories: