சுற்றுலா பயணிகள் குவிந்ததால் களைகட்டியது மாமல்லபுரம்

சென்னை: மாமல்லபுரத்தில் மொகரம் பண்டிகை விடுமுறையை தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். அவர்கள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியில் திளைத்தனர். நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை கடந்த 5ம் தேதி முதல்  வரும் 15ம் தேதி வரை கட்டணமின்றி இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் என ஒன்றிய அரசு அறிவித்தது. இதையடுத்து, மொகரம் விடுமுறை தினமான நேற்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்நாட்டு பயணிகள் வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் குடும்பம் குடும்பமாக குவிந்தனர்.

இதையடுத்து, புராதன சின்னங்களான வெண்ணெய் உருண்டை கல் பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில், புலிக்குகை உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்தனர். மகிழ்ச்சியில் திளைத்த அவர்கள் குடும்பம் குடும்பமாக செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதேபோல், மாமல்லபுரம் கடற்கரையில் ஏராளமானோர் குவிந்தனர். ஆபத்தை உணராமல் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை கடலில் இறங்கி ஜாலியாக குளித்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் மாமல்லபுரம் களைகட்டியது.

Related Stories: