கொந்தகை அகழாய்வில் 74 சூது பவள மணிகள் கண்டெடுப்பு: புதைவிட பகுதியில் கிடைப்பது இதுவே முதன்முறை

திருப்புவனம்: கீழடி 8ம் கட்ட அகழாய்வில் கொந்தகை புதைவிட பகுதி தளத்தில் முதுமக்கள் தாழியினுள் 74 அடர் சிவப்பு நிறத்தில் சூது பவள மணிகள் கண்டறியப்பட்டுள்ளன.சிவகங்கை மாவட்டம், கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கீழடி, அகரம் மக்கள் வாழ்விட பகுதியாகவும், கொந்தகை புதைவிட பகுதியாக (Burial Sight)  கண்டறியப்பட்டு ஆய்வுகள் நடத்தப்படுகிறது. கொந்தகையில் நடந்த மூன்று கட்ட ஆய்வில் இதுவரை 135 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

தற்போது மூன்றாம் கட்ட ஆய்வில் மட்டும் 57 முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டன. அதில் ஒரு முதுமக்கள் தாழி திறக்கப்பட்டு பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. 2வது சிதிலமடைந்த தாழியினுள் அடர் சிவப்பு நிறமுடைய சூது பவள மணிகள் கிடைத்துள்ளன. பண்டைய காலத்தில் இறந்தவர்களை தாழியினுள் வைத்து புதைக்கும்போது அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், விரும்பிய பொருட்களை வைத்து புதைப்பது வழக்கம். கொந்தகை 7ம் கட்ட அகழாய்வில் தாழியினுள் கத்தி போன்ற ஆயுதம் எடுக்கப்பட்டது.

5ம் கட்ட கீழடி அகழாய்வில் பன்றி உருவம் பதித்த வெளிர் சிவப்பு நிற சூது பவளம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று 80ம் எண் கொண்ட தாழியினுள் உள்ள சூது பவளத்தை வெளியே எடுக்கும் பணியில் தமிழக தொல்லியல் துறை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் கீழடி அகழாய்வு பிரிவின் இணை இயக்குநர் ரமேஷ், தொல்லியல் ஆய்வாளர்கள் அஜய், காவ்யா, சுரேஷ் ஆகியோர் ஈடுபட்டனர். நீள் வடிவிலான சூது பவள மணிகள் அனைத்தும் ஒரே அளவிலானவை. 3 செமீ நீளமுள்ள இவற்றை மாலையாக அணிந்திருக்கலாம் என கருதப்படுகிறது. சூது பவள மணிகளின் நடுவே காப்பர் துண்டு ஒன்றும் சிதைந்த நிலையில் கிடைத்துள்ளது.

அதிக விலை மதிப்புடையதாக கருதப்படும் சூது பவள மணிகள், தமிழகத்தில் இதுவரை நடந்த புதைவிட பகுதி ஆய்வில் முதன் முறையாக கொந்தகை தளத்தில் கிடைத்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதுகுறித்து கீழடி அகழாய்வு பிரிவின் இணை இயக்குநர் ரமேஷ் கூறுகையில், ‘‘கொந்தகை புதையிட பகுதியில் நேற்று 80ம் எண் தாழியை திறந்தபோது 74 சூது பவள மணிகள் கண்டறியப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை நடந்த புதைவிட பகுதி ஆய்வில் கொந்தகையில் முதன்முதலாக 74 சூது பவள மணிகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.

Related Stories: